சிறைக் கைதிகளை மணக்கும் பெண்கள்: மகளிர் ஆணையம் நீதிமன்றத்தில் விளக்கம்

சிறைக் கைதிகளை மணக்கும் பெண்கள்: மகளிர் ஆணையம் நீதிமன்றத்தில் விளக்கம்
Updated on
1 min read

சிறைக் கைதிகளை மணக்கும் பெண்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்த உயர் நீதிமன்றம், மணமகளின் ஒப்புதல் பெறப்படுகிறதா அல்லது பல்வேறு மத மற்றும் சாதி ரீதியிலான நடைமுறை காரணமாக கட்டாயப்படுத்தப் படுகிறார்களா? என விளக்கம் கேட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் பதில் அளித்தது.

தண்டனைக் கைதிகளாக இருப்பவர்களுக்கு விடுப்பு அல்லது பரோல் கோரி அவர்களின் மனைவிகள் தொடர்ந்த பல வழக்குகளை நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பரோலில் வந்து செல்லும் ஆயுள் தண்டனைக் கைதிகளை திருமணம் முடிக்கும் பெண்கள் குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்திருந்தனர்.

ஆயுள் தண்டனைக் கைதிகளை மணம் முடிக்கும் விவகாரத்தில், மணமகளின் ஒப்புதல் பெறப்படுகிறதா அல்லது பல்வேறு மத மற்றும் சாதி ரீதியிலான நடைமுறை காரணமாக கட்டாயப்படுத்தப்படுகிறார்களா என ஆராயும் நடைமுறையை உருவாக்க வேண்டுமெனத் தெரிவித்த நீதிபதிகள், தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையங்கள் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பு செயலாளர் பிரீத்தி குமார் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “தேசிய மகளிர் ஆணையச் சட்டப்படி, ஆணையம் என்பது ஆலோசனைக் குழு மட்டுமே. அரசுக்கு உத்தரவிடும் அமைப்பு அல்ல. திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். தண்டனைக்கு உள்ளானவரைப் பெண்கள் திருமணம் செய்ய எந்தச் சட்டமும் தடையாக இல்லை.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்பது ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. தண்டனைக் கைதியை திருமணம் முடிக்கும் பெண்ணிடம் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டதா அல்லது மதம் மற்றும் குடும்பத்தினரின் நிர்பந்தம் காரணமாக திருமணம் நடத்தப்படுகிறதா? என விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in