Last Updated : 30 Sep, 2020 07:16 PM

 

Published : 30 Sep 2020 07:16 PM
Last Updated : 30 Sep 2020 07:16 PM

மரகதலிங்கம் மாயமான விவகாரம்: விசாரணை வளையத்துக்குள் மதுரை மாநகராட்சி அதிகாரிகள்

மதுரை 

மதுரையில் மாயமான மரகதலிங்கம் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணை வளையத்துக்குள் அதிகாரிகள் சிக்கியுள்ளனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் எதிரே குன்னத்தூர் சத்திரம் அருகில் மாநகராட்சி வரிவசூல் அலுவலகத்தில் பழமையான மரகதலிங்கம் இருந்தது.

அதற்கு பூசாரி நியமிக்கப்பட்டு தொடர்ந்து பூஜை நடந்திருக்கிறது. மரகதலிங்கம் இருந்த கட்டிடம் ஸ்திரத் தன்மை இழந்ததாகக் கூறி இடித்தபோது, அங்கிருந்த மரகதலிங்கம் உள்ளிட்ட பொருட்கள் மதுரை மாநகராட்சி கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதன்பிறகு மரகதலிங்கம் மாயமானதாக, புகார் எழுந்தது.

இது தொடர்பாக மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தல்லாகுளம் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், மாயமான மரகதலிங்கம் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மரகதலிங்கத்தை மீட்டு, மீண்டும் வழிபாட்டிற்கு வைக்க வேண்டுமென அவர் மதுரை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் அப்போதைய மாநகராட்சி ஆணையர் தினகரன் நேரில் ஆஜராகினார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் சேலம் பகுதியில் பழமையான மரகதலிங்கம் ஒன்றை மீட்டனர்.

இது மதுரையில் மாயமான மரகதலிங்கமாக இருக்கும் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

இது பற்றி வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் முதலில் விசாரணையைத் தொடங்கினர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதுரை வந்த ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் மாநகராட்சி கருவூல அலுவல கத்திலுள்ள மரகதலிங்கம் தொடர்பான சில ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

ஏற்கெனவே காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆவணங்கள் கிடைத்துள்ளதால் இந்த விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது என, வழக்கறிஞர் முத்துக்குமார் தெரிவிக்கிறார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது: மதுரையில் மாயமான மரகதலிங்கம் சுமார் 400 ஆண்டு பழமையானது. குன்னத்தூர் சத்திரம் இடிக்கும்போது, மரகதலிங்கம் மற்றும் அங்குள்ள விலையுர்ந்த பொருட்கள் மாநகராட்சி மைய கருவூலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இப்பொருட்களை அப்போதைய கருவூல அலுவலர் ரவீந்திரன் என்பவர் கையெழுத்திட்டு வாங்கியதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரகத லிங்கம் மாயமான நேரத்தில் மாநகராட்சியின் இரு முக்கிய அதிகாரிகள் வெளிநாடு சென்று, பச்சை நிற மரகதலிங்கத்துக்கு பதில் ஸ்படிகலிங்கம் வாங்க முயன்றனர்.

அது கிடைக்காத நிலையில், குன்னத்தூர் சத்திரத்தில் இருந்தது ஸ்படிகலிங்கம் என, நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இது போன்ற பல்வேறு குளறுபடியை அதிகாரிகள் செய்துள்ளனர்.

மரகதலிங்கத்துக்கு பூஜை செய்த மீனாட்சிசுந்தரம் சமீபத்தில் உயிரிழந்தார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் தல்லாகுளம்போலீஸ் தாக்கல்செய்த அறிக்கையில், பச்சை நிற மரகதலிங்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற முரண்பட்ட தகவலால் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் நிலையில் மாநகராட்சி பொறியாளர் உட்பட சில முக்கிய அதிகாரிகளிடம் விசாரிக்க சிலைக் கடத்தல் பிரிவு திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சி அனுமதியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்க சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கான அவர்கள் மதுரையில் முகாமிட்டுள்ளனர். அப்போதைய கருவூல அலுவலர் ரவீந்திரன், காசாளர் வெங்கடேசன், தற்போதைய நிர்வாக அலுவலர் ரங்கராஜன் ஆகியோர் விசாரணை வளையத்திற்குள் உள்ளனர்.

இந்த விவகாரம் முடியும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஓய்வு அளிக்கக்கூடாது எனப் பொதுநல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்வேன், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x