

ஆடு வளர்ப்பு திட்டம் மூலம் அதிக ஊக்கத்தொகை தருவதாகக் கூறி ரூ.1.38 கோடி மோசடி செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வந்த 'அசோக் பார்ம்ஸ் அண்டு கோப்ராஸ்' நிறுவனத்தினர் ரூ.1 லட்சம் செலுத்தினால் ஆட்டுக் குட்டி வழங்கி, மாதப் பராமரிப்பு செலவு மற்றும் அதிக ஊக்கத் தொகை வழங்குவதாகவும், ரூ.50 ஆயிரம் கொடுத்தால் தேங்காய் வழங்கி அதிலிருந்து பருப்பு உடைத்து தருவதற்கு மாதம் ரூ.8,000 தருவதாகவும் விளம்பரப்படுத்தியுள்ளனர்.
இந்தத் திட்டங்களை நம்பி பலர் முதலீடு செய்துள்ளனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி மாதந்தோறும் உரிய தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து, பெறப்பட்ட புகார் அடிப்படையில், 89 முதலீட்டாளர்களிடம் ரூ.1.38 மோசடி செய்ததாக நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளரான கவுந்தப்பாடிபுதூரைச் சேர்ந்த ஜி.ராஜேஷ் (30) மீதும் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2012-ம் ஆண்டு 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்த நிலையில், விசாணை முடிவடைந்து இன்று (செப். 30) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.ராஜேஷுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.45 லட்சம் அபராதம் விதித்து சிறப்பு நீதிபதி ஏ.எஸ்.ரவி உத்தரவிட்டார்.