Last Updated : 30 Sep, 2020 06:13 PM

 

Published : 30 Sep 2020 06:13 PM
Last Updated : 30 Sep 2020 06:13 PM

மில்கள் தொடர்ந்து மூடல்: புதுச்சேரி காங்கிரஸ் அரசு மீது திமுக கடும் சாடல்

மில்கள் தொடர்ந்து வரிசையாக மூடப்படுவதைத் தொடர்ந்து புதுச்சேரி காங்கிரஸ் அரசைக் கூட்டணிக் கட்சியான திமுக கடுமையாகச் சாடியுள்ளது.

புதுச்சேரியின் அடையாளமாக இருக்கும் மில்களை அரசு தொடர்ந்து மூடி வருகிறது. ஏஎப்டி மில்லைத் தொடர்ந்து சுதேசி, பாரதி மில்கள் இன்றுடன் (செப். 30) மூடுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இதற்கு ஆளும் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ கூறியதாவது:

"புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு தேர்தலில் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக, வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு, இருக்கின்ற பஞ்சாலைகளை நவீனப்படுத்தி முழு அளவில் இயக்கி பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்ற அறிவிப்புகள் புதுச்சேரி மக்களை வெகுவாகக் கவர்ந்தன.

ஆனால், கூட்டணிக் கட்சி மற்றும் மக்களின் நம்பிக்கைக்கு மாறாக அரசு நிர்வாகம் செல்லத் தொடங்கியது. இதைப் பல முறை கூட்டணிக் கட்சியான திமுக வலியுறுத்தியும் ஆட்சி நிர்வாகம் தான் செல்லும் போக்கில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் உள்ளது.

கூட்டணி வைத்துள்ள கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் பெருமைப்படும் அளவுக்கு அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். ஆனால், புதுச்சேரியில் கூட்டணி அரசுக்குத் தலைமை வகித்து வரும் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் அவ்வாறு இல்லை. இந்நிலை நீடித்தால் தொண்டர்களைத் தேர்தலின்போது எந்தவிதப் பணியும் செய்ய வலியுறுத்த முடியாது".

இவ்வாறு சிவா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

புதுவை வடக்கு மாநில திமுக அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் கூறியதாவது:

"பஞ்சாலைகளின் மரணம், திட்டமிட்ட 'ஸ்லோ பாய்சன்', தரப்பட்ட இரக்கமற்ற படுகொலை. அதிகார வர்க்கத்தால் திட்டமிட்டு எடுக்கப்பட்ட அழிவுக்கான முடிவு.

மூன்று மில்களைக் கூட நடத்த திட்டமிட முடியாத அதிகார வர்க்கங்கள், அரசை நிர்வகித்து என்ன பயன்?

திமுக வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார்

புதுவை மாநிலத்திற்குக் கேடு நடந்து கொண்டு இருக்கிறது. ஜனநாயகம் பட்டப்பகலில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்படுகிறது.

மில்லை மூடுகின்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அரசை வழிநடத்துபவர் யாராக இருந்தாலும், அவா்களிடம் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். உங்களால் ஆக்கபூர்வமாக எதையும் செய்ய முடியாவிட்டாலும் அனைத்து மில்களையும் விற்றுவிடாமல் ஒரு ஆறுமாத காலத்திற்காவது விட்டு வையுங்கள், ஆண்டவர் காப்பாற்றுவாார்".

இவ்வாறு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x