

பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 வயதுப் பெண் குழந்தை குமரி மாவட்டம் களியக்காவிளையில் மீட்கப்பட்டார். குழந்தைகளைக் கடத்திய தம்பதியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் இருந்தபோது ஒரு சிறுவன், மற்றும் பெண் குழந்தையுடன் கணவன், மனைவி சுற்றித் திரிந்தவாறு இருந்தனர். மேலும், குழந்தை அழுதவாறு இருந்தது. அந்தத் தம்பதியினர் அழுகையை நிறுத்த முயன்றும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. இது போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கேரள மாநிலம் வெள்ளையம்பலத்தைச் சேர்ந்த ஜோசப்ஜான் (45), அவரது மனைவி எஸ்தர் (38) எனத் தெரியவந்தது.
போலீஸாரின் கேள்விகளுக்கு அவர்கள் முரணான பதிலை அளித்தனர். இதனால் கணவன், மனைவி, மற்றும் இரு குழந்தைகளையும் களியக்காவிளை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது இருவருமே தங்கள் குழந்தைகள் என்றே அவர்கள் தெரிவித்தனர்.
8 வயதுச் சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, இந்த மாதத் தொடக்கத்தில் பெங்களூருவில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து பெண் குழந்தையை இருவரும் கடத்தியதாகத் தெரிவித்தார்.
சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியைச் சேர்ந்த கார்த்தீஸ்வரி என்பவரது மகள் என்று அச்சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக கர்நாடக போலீஸாருக்கு களியக்காவிளை போலீஸார் தகவல் கொடுத்தனர். மேலும் சிறுவனும் ஜோசப்ஜானின் குழந்தை தானா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இரு குழந்தைகளையும் நாகர்கோவிலில் உள்ள ஒரு காப்பகத்தில் போலீஸார் ஒப்படைத்தனர். கர்நாடக போலீஸார், மற்றும் குழந்தையின் தாயார் குமரி வருகின்றனர். அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்து, தம்பதியரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.