

தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 7 நாள் சிபிசிஐடி விசாரணை அனுமதி வழங்கி கோவில்பட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (35). இவர் கடந்த மாதம் 17-ம் தேதி நிலத்தகராறு தொடர்பாக காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தட்டார்மடம் காவல் ஆய்வாளராக இருந்த ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில், முத்துராமலிங்கம்(32), சின்னத்துரை ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இவர்கள் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் புகார்தாரரான செல்வனின் தாய் எலிசபெத் (77) கடந்த 28-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கிடையே சிறையில் உள்ள 4 பேரை காவலில் எடுக்க விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் கடந்த 28-ம் தேதி கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண் 1-ல் அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதற்காக நேற்று மதியம் 12.30 மணியளவில் போலீஸார், செல்வன் கொலை வழக்கில் சிறையில் உள்ள முத்துராமலிங்கம், சின்னத்துரை, திருமணவேல், முத்துகிருஷ்ணன் ஆகிய 4 பேரை கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்துக்கு சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாரும் வந்திருந்தனர்.
நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தி, 4 பேருக்கு அக்.6-ம் தேதி வரை 7 நாட்கள் சிபிசிஐடி விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மீண்டும் அவர்கள் 4 பேரையும் அக்.6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் 4 பேரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.