Published : 30 Sep 2020 04:04 PM
Last Updated : 30 Sep 2020 04:04 PM

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; சிபிஐ குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழான தனது கடமையைத் துறந்துள்ளது: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை

அரசியல் சட்டத்திற்கு நெருக்கடியை உருவாக்கிய ஒரு முக்கிய வழக்கில், பொறுப்பில்லாமல் ஏனோதானோ மனப்பான்மையுடன், சிபிஐ செயல்பட்டு - குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழான தனது கடமைகளைத் துறந்திருப்பது, நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்திவிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“ ‘தொழுகை நடத்தும் இடத்தை அழிக்கும் நோக்கத்துடன், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது’ (the entire structure of the mosque was brought down in a calculated act of destroying a place of public worship) என்று பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும்; “பாபர் மசூதி இடிப்பு வழக்கினை - அதில் உள்ள குற்றச்சதியை நிரூபிக்க முடியாமல், சிபிஐ தோற்று இருப்பது, இந்திய நாடு பாதுகாத்திட வேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

மசூதி மட்டுமல்ல; எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்தையும் ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் அநியாயத்திலும் அநியாயமாகும்; அப்பட்டமான சட்ட விரோதச் செயலாகும். குற்ற வழக்குகளில் - குறிப்பாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நன்மதிப்பைச் சீர்குலைத்த “பாபர் மசூதி” இடிப்பு வழக்கில் - நடுநிலையுடன், எச்சரிக்கையாகவும் நியாயமாகவும் செயல்பட்டிருக்க வேண்டிய சிபிஐ, அப்படிச் செயல்பட ஏனோ தவறி, இன்று மத்திய பாஜக அரசின் “கூண்டுக்கிளியாக” மாறிவிட்டது வெட்கக் கேடானது.

அரசியல் சட்டத்திற்கு நெருக்கடியை உருவாக்கிய ஒரு முக்கிய வழக்கில், பொறுப்பில்லாமல் ஏனோதானோ மனப்பான்மையுடன், சிபிஐ செயல்பட்டு - குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழான தனது கடமைகளைத் துறந்திருப்பது, நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது அனைவர்க்கும் ஆழ்ந்த கவலையைத் தருவதாகும்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x