Published : 30 Sep 2020 03:48 PM
Last Updated : 30 Sep 2020 03:48 PM

பாபர் மசூதி இடிப்பு வழக்கு; சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல் 

சென்னை

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனைத்துக் குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருக்கிறது. சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், நீதி வழங்கவில்லை. எனவே, இந்தத் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

“அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனைத்துக் குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருக்கிறது. போதிய ஆதாரங்களோ, சதித் திட்டத்திற்கான தடயங்களோ இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி கூறியிருக்கிறார். இந்தத் தீர்ப்பு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கிற அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

பாஜக உள்ளிட்ட சங் பரிவாரங்கள் கரசேவை செய்வதாக அறிவித்து, ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டி, 464 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாபர் மசூதி 1992 இல் பலவந்தமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கரசேவகர்களைத் தூண்டும் வகையில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தரப் பிரதேச அன்றைய முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்டோர் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்களை மத்திய புலனாய்வுத்துறை திரட்டவில்லை. சதித் திட்டத்திற்கான சாட்சியங்களையும் சேகரிக்கவில்லை. இந்த வழக்கை நிரூபித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் மத்திய புலனாய்வுத்துறை முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது. இதன் மூலம் மத்திய புலனாய்வுத்துறை மத்திய பாஜக அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டதோ என்கிற பலத்த சந்தேகம் எழுகிறது. இதன் காரணமாகவே பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்ட பாஜகவினர் அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் 2017 இல் பாபர் மசூதி இடிப்பு குறித்து உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டபோது, 'இது ஒரு கிரிமினல் நடவடிக்கை. இது அதிர்ச்சி தரத்தக்க வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைக்குக் கேடு விளைவிக்கிற செயல். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தக் கூற்றுக்கு நேர்மாறாக லக்னோ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்திருக்கிறது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், நீதி வழங்கவில்லை. எனவே, இந்தத் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x