Last Updated : 30 Sep, 2020 03:38 PM

 

Published : 30 Sep 2020 03:38 PM
Last Updated : 30 Sep 2020 03:38 PM

விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க தான் திமுகவுக்கு தெரியும்; அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்

அமைச்சர் சி.வி.சண்முகம்: கோப்புப்படம்

விழுப்புரம்

விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க தான் திமுகவுக்கு தெரியும் என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. அதில் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து துறை அதிகாரிகளுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வாறு விழுப்புரம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக தமிழ்நாடு முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீதான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் இன்று (செப். 30) நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு விழுப்புரம், சிறுவந்தாடு, கோலியனூர் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 865 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தவர்கள், உதவித்தொகை மற்றும் முதியோருக்கான உதவித் தொகையினை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், "அதிமுக ஆட்சியை மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைய வேண்டும். முதல்வரும் துணை முதல்வரும் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்போம் . பச்சை நிற வேஷம் போட்டவர் எல்லாம் விவசாயி ஆகிவிட முடியுமா? ஏறு தூக்கியவர், இன்று போய் சேற்றை மிதித்தவர் எல்லாம் விவசாயியாகிவிட முடியுமா?

உண்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயத்தை செய்து கொண்டு இருப்பவர் தமிழக முதல்வர். விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க தான் திமுகவுக்கு தெரியும். நிலத்தையும், வீட்டை அபகரிப்பது தான் திமுகவினர் தொழில். நீலி கண்ணீர் வடிக்கிறாரா ஸ்டாலின்?

திமுக மீது உள்ள மிகப்பெரிய 2 ஜி ஊழல் இதுவரை நடைபெறாத ஊழல். 2 லட்சம் கோடி ஊழல் செய்து நாட்டையே உலகத்தையே சுரண்டிய குடும்பம், கருணாநிதி குடும்பம். கனிமொழி உட்பட்டோர் தொடர்புடைய அந்த வழக்கின் விசாரணை அக். 5-ம் தேதி முதல் தினந்தோறும் நடைபெறும் என, டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் கூறுவார்?" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x