Published : 30 Sep 2020 01:31 PM
Last Updated : 30 Sep 2020 01:31 PM

சென்னையில் 7 மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சியின் 7 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை, நாட்டிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்..

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“முதல்வர் பழனிசாமி சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 7 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நாட்டிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக, தனியார் நிறுவனத்தின் காம்பாக்டர்கள், மெக்கானிக்கல் ஸ்வீப்பர், இ-ரிக்ஷாக்கள் ஆகிய வாகனங்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு, பெருநகர சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சென்னை மாநகரில் சேகரமாகும் அனைத்து திடக்கழிவுகளையும் குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்வதைத் தவிர்த்து, நவீன தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி மறுசுழற்சி செய்து பொதுமக்களுக்கு சுகாதார மற்றும் சுத்தமான சூழலை ஏற்படுத்துதல், நிலம் மற்றும் நீர் மாசுபடுதலைத் தவிர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு திடக்கழிவு மேலாண்மை பணிகளைச் செயல்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாகச் செயல்படுத்தும் விதமாக 19,467 பணியாளர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று குப்பைகள் பெறப்பட்டு, அவை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை எனத் தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளின் ஈரக் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயு தயாரிக்கப்பட்டு வருகிறது. உலர்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு, மறு உபயோகம் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள குப்பைகள் தற்போது பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் சேகரமாகும் குப்பைகளின் அளவுகளைப் படிப்படியாகக் குறைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், நிலம் மற்றும் நிலத்தடி நீரின் மாசுபாட்டைத் தவிர்க்கும் வகையிலும், குப்பைகளிலிருந்து இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயு தயார் செய்ய கட்டமைப்புகள், தாவர கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் கட்டமைப்புகள், உலர்குப்பைகளை நவீன முறையில் எரியூட்டும் கலன்கள், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து திரவ எரிபொருள் தயார் செய்யும் ஆலைகள் மற்றும் குப்பை கொட்டும் வளாகங்களில் BIO-MINING முறையில் குப்பைகளைப் பிரித்தெடுத்து, மறுசுழற்சி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை மேலும் சிறப்பாகச் செயல்படுத்தும் பொருட்டும், மண்டலங்களில் உள்ள தெருக்களைப் பெருக்குதல், வீடுகள்தோறும் தரம் பிரித்துச் சேகரிக்கப்படும் கழிவுகளை, அதற்குரிய பதப்படுத்தப்படும் நிலையங்களுக்குக் கொண்டு செல்லுதல், எஞ்சிய கழிவுகளைக் குப்பை கொட்டும் வளாகங்களுக்குக் கொண்டு சேர்த்தல் ஆகிய பணிகளை பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளும் வகையிலும், ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த M/s Urbaser SA and Sumeet Facilities Limited நிறுவனத்திற்கு 8 ஆண்டு காலத்திற்கு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஓமன், பக்ரைன், பிரேசில், அர்ஜெட்டினா, சிலி, பெரு ஆகிய நாடுகளிலும், நம் நாட்டின் தலைநகரமான டெல்லி மாநகரத்திலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 7 மண்டலங்களுக்குட்பட்ட 92 வார்டுகளில் உள்ள 16,621 தெருக்களில் வசிக்கும் சுமார் 37 லட்சம் மக்கள் பயனடையும் வகையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள M/s Urbaser SA and Sumeet Facilities Limited நிறுவனத்திற்கு 24.12.2019 அன்று பணி ஆணை வழங்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 7 மண்டலங்களில் ஓராண்டு காலத்திற்குள் அனைத்து வீடுகளிலிருந்தும் 100 சதவிகிதம் தரம்பிரிக்கப்பட்ட குப்பைகள் முறைப்படி பெறப்படும். இதற்காக, பழைய மூன்று சக்கர மிதிவண்டிக்குப் பதிலாக, மின்கல வாகனங்கள் (Battery Operated Vehicle) பயன்படுத்தப்படும். இதன்மூலம் மேற்குறிப்பிட்ட 7 மண்டலங்களில் மனித ஆற்றலைக் கொண்டு இயக்கப்பட்டு வந்த மூன்று சக்கர மிதிவண்டிகள் முற்றிலும் நீக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்கல வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை வீடுகள்தோறும் பெறுதல், குறைந்த உறுதி செய்யப்பட்ட கழிவுகளைப் பதனிடுதல், வளாகத்திற்குக் கொண்டு சேர்த்தல், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை 6 மணி நேரத்திற்குள் சரிசெய்தல் போன்ற 34 எண்ணிக்கையிலான செயல்திறன் குறியீடுகள் வாயிலாக பணிகளைக் கண்காணித்து, அதன் மதிப்பீட்டு அடிப்படையில் ஒப்பந்ததாரர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்படும்.

இப்பணிகளை மேற்பார்வையிட பிரத்யேகமாக மூன்றாம் நிலை ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்களின் செயல்திறன் கண்காணிக்கப்படும். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் நேரடியாக பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடு நிலையங்களான இயற்கை உரம் தயாரிக்கும் மையம், பொருட்கள் மீட்பு வசதி மையம், எரியூட்டும் நிலையம், உயிரி அழுத்த இயற்கை வாயு நிலையம், தோட்டக் கழிவு மற்றும் தேங்காய் மட்டை பதனிடும் மையம், வளமீட்பு மையம், உயிரி மீத்தேன் வாயு நிலையம் ஆகிய மையங்களில் சேர்க்கப்படும்.

மேலும், மேலாண்மைத் தகவல் அமைப்பு மூலம் குப்பைத் தொட்டிகளிலிருந்து குப்பைகள் அகற்றுதல் மற்றும் வாகனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 7 மண்டலங்களிலும் மேற்குறிப்பிட்ட தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 8 ஆண்டு காலத்திற்கு தனியார் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் 125 காம்பாக்டர்கள், 38 மெக்கானிக்கல் ஸ்வீப்பர், 3,000 இ-ரிக்ஷாக்கள், 11,000 காம்பாக்டர் குப்பைத் தொட்டிகள் போன்ற உபகரணங்களுடன், 10,844 எண்ணிக்கையிலான அனைத்து வகைப் பணியாளர்களும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், பெஞ்சமின், சட்டப்பேரவைஉறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x