

வீட்டு விசேஷங்களுக்கு தேவைப்படும் பால் சார்ந்த பொருட்களை உள்ளடக்கிய ஆவின் ‘கிப்ட் பேக்’ சென்னையில் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆவின் நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆவின் நிறுவனம் நுகர்வோரின் தேவையை கருத்தில் கொண்டு வீட்டு விசேஷங்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக ஆவின் ‘கிப்ட் பேக்’ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் வகையில் நெய் 200 கிராம், குலோப் ஜாமுன் 250 கிராம், ஆவின் சாக்லேட் நட்டீஸ், மற்றும் மில்க்கி நட்டீஸ் தலா ஒன்று, பாதாம் மிக்ஸ் பவுடர் 200 கிராம், மாவின் 200 கிராம் இரண்டு ஆகிய ஐந்து பொருட்கள் ஒன்றாக கிடைக்கும் வகையில் இந்த கிப்ட் பேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் அடங்கிய கிப்ட் பேக்கின் விலை ரூ.350 ஆகும்.
முதற்கட்டமாக சென்னையில் ஆவின் கிப்ட் பேக் நாளை (இன்று) முதல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் உள்ள அனைத்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் இது விற்கப் படும்.
ஆவின் கிப்ட் பேக் மொத்த மாக தேவைப்படும் நுகர்வோர் ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகம் ஆகியவற்றில் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
நுகர்வோர் தங்களது ஆலோசனைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க 18004253300 என்ற இலவச தொலைபேசி எண் அல்லது aavincomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.