விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒரே வாரத்தில் 2-வது சம்பவம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

சாத்தூர் அருகே உள்ள கீழதாயில்பட்டியில் கேசவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்ற இந்த ஆலையில் 12 அறைகளில் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படும் இந்த ஆலையை சிவகாசி அருகே உள்ள பாறைபட்டியைச் சேர்ந்த ராஜன் என்பவர் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் காலையில் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. 60 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெளியில் உளர்த்துவதற்காக காய வைக்கப்பட்டு இருந்த சிட்டுபுட்டு பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறின. இதைப் பார்த்த தொழிலாளர்கள் அனைவரும் ஆலையில் இருந்து வெளியே ஓடிச் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே வாரத்தில் 2-வது சம்பவம்:

முன்னதாக கடந்த திங்கள் கிழமையன்று விருதுநகர் அருகே குந்தலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது உராய்வு ஏற்பட்டு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

அப்போது மருந்து கலக்கும் அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த செங்குன்றாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (55) படுகாயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் மருந்து கலக்கும் அறை முற்றிலும் வெடித்து சிதறியது.‌

இன்றைய விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் விருதுநகரில் பட்டாசு ஆலைகல் விறுவிறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. அதேவேளையில் விபத்தும் தொடர்கதையாகி வருகிறது.

தனியார் பட்டாசு ஆலைகளை தயாரிப்பு வேலையை முடுக்கிவிடும் அதே நேரத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in