

குடும்பத் தகராறால் குடிபோதையின்போது தன் மனைவியைக் கொன்ற கணவர் தானும் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவர்களின் இரு குழந்தைகளும் ஆதரவு இன்றித் தவித்த நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர் உதவியுடன் குழந்தைகள் தொண்டு நிறுவன விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டம் உன்னங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி தங்கம். ராஜசேகர் தேங்காய் வெட்டும் தொழிலாளியாக இருந்து வந்தார். ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்லாத ராஜசேகர், குடும்பத்தையும் சரிவரக் கவனிக்காமல் இருந்துள்ளார். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
சரிவர வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் ராஜசேகரை நினைத்து, தங்கம் பெரும் கவலை கொண்டார். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கணக்கில்கொண்டு பக்கத்தில் ஒரு முந்திரி ஆலைக்கு வேலைக்குப் போனார் தங்கம். இது ராஜசேகருக்குப் பிடிக்கவில்லை.
சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மது போதையில் குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக்கொன்ற ராஜசேகர், தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால், அவர்களையே நம்பி இருந்த குழந்தைகள் எதிர்காலம் கேள்விக்குறி ஆனது. இதை ஊடகங்களின் வழியாக அறிந்துகொண்ட சமூக சேவகர் சுரேஷ் சுவாமியார் காணி அந்தக் குழந்தைகளைத் தன் பொறுப்பில் எடுத்து அவர்களின் எதிர்காலத்துக்கு சில உதவிகளைச் செய்துள்ளார். கூடவே அவர்களுக்குக் கல்வி, தங்குமிடம் தொடர்பான வசதிகளையும் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
பழங்குடி இனக் காணிப் பிரிவில் முதல் முனைவர் பட்டம் பெற்றவர் சுரேஷ் சுவாமியார் காணி. பழங்குடி சமூகத்தின் வளர்ச்சிக்காகத் தொடர் பங்களிப்பு செய்துவரும் அவர், இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''குடிபோதையினால் கொலை செய்த கொலையாளிக்குப் பிள்ளைகளாகப் பிறந்ததைத் தவிர வேறு எந்தத் தவறையும் இந்தக் குழந்தைகள் செய்யவில்லை.
ஒற்றை இரவில் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலையில் நின்ற இக்குழந்தைகளுக்கு அவர்களது பெரியப்பா, பெரியம்மா அடைக்கலம் கொடுத்தனர். எனினும் அது நிரந்தரமல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. அடுத்த பொழுது எங்கு தங்குவது? எங்கு படிப்பது? இருண்டுபோன அவர்களின் எதிர்காலத்திற்கு விளக்கேற்றுவது எப்படி? என யோசித்தேன்.
கனத்த இதயத்தோடும், பிரார்த்தனையோடும் தடிக்காரன்கோணம் சி.எம்.எஸ் தொண்டு நிறுவனத்தை அணுகினேன். வார்டன் மற்றும் ஏரியா மேலாளர் ஆகியோரிடம் பத்திரிகை செய்தி ஆதாரத்தோடு பிள்ளைகளுக்கு அடைக்கலம் கேட்டேன். உடனே பிள்ளைகளை அழைத்து வாருங்கள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்காகத்தான் இந்த மையம் இயங்குகிறது என்றார்கள். இந்தக் குழந்தைகளுக்கு தடிக்காரன்கோணம் சி.எம்.எஸ் விடுதியில் தங்கவும், சி.எம்.எஸ் உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.