Last Updated : 30 Sep, 2020 11:48 AM

 

Published : 30 Sep 2020 11:48 AM
Last Updated : 30 Sep 2020 11:48 AM

கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் பாடல்கள் மூலம் உற்சாகப்படுத்தி வரும் மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி

வாட்டர் கேன் மூலம் இசையெழுப்பிப் பாடும் திருமூர்த்தி.

கிருஷ்ணகிரி

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு சார்பில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் கரோனா பாதித்தவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார், பார்வையற்ற மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நொச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமாலின் மகன் திருமூர்த்தி. பிறவியிலேயே பார்வை இல்லை என்றாலும் இசைத்திறன் கொண்ட குரலுடன் பிறந்தவர்தான் திருமூர்த்தி.

திருமூர்த்திக்குக் கண் பார்வை இல்லாததால் அவரைப் பெற்றோர்கள் பர்கூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்த்து பின்னர் மகனை தனியாக விட அஞ்சி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே வைத்துக்கொண்டனர். இந்த நிலையில், இயற்கையிலேயே நல்ல குரல் வளத்துடன் பிறந்ததால் திருமூர்த்தி அந்தக் கிராமத்தில் தனது பாடல்திறன் மூலம் மக்களின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வருகிறார். 22 வயதான திருமூர்த்தி 200-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைச் சரளமாகப் பாடுவார்.

திருமூர்த்தி தனது சிறுவயதில் கொட்டாங்குச்சி மூலம் இசை வாசித்துக்கொண்டே பாடத் தொடங்கினார். பின்னர் வீட்டில் உள்ள பாத்திரங்கள், குடம் போன்ற பொருட்களில் இசையை வாசித்து அதற்கு ஏற்றாற்போல் பாடலைப் பாடி வந்தார்.

இவ்வாறு தனது குரல் வளத்தால் அனைவரையும் ஈர்க்கும் திருமூர்த்தி சில நாட்களுக்கு முன்பு அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடலைப் பாடினார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் அருண்குமார் என்பவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

பெங்களூருவில் பணிபுரியும் மதன் குமார், அந்தப் பாடலை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ பதிவு செய்த சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் பரவியது. அவ்வாறு சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆன இந்த வீடியோவைப் பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் திருமூர்த்தியின் தொடர்பு எண்ணைக் கேட்டிருந்தார். இதனை அடுத்து திருமூர்த்தியை செல்போனில் அழைத்துப் பேசிய டி.இமான், திருமூர்த்திக்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன் ஜீவா நடிப்பில் வெளியான 'சீறு' படத்தில் தனது இசையில் 'செவ்வந்தியே' எனத் தொடங்கும் பாடலைப் பாட வாய்ப்பளித்தார். பாடலும் 'சூப்பர் டூப்பராக' வெற்றி பெற்றது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் தனது வீட்டிலேயே திருமூர்த்தி முடங்கிக் கிடந்தார். கடந்த 25-ம் தேதி அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதியானதால் அவர் பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ஒதுக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடன் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சிகிச்சை மையத்தில் பெரும்பாலான நேரங்களில் திருமூர்த்தி அங்குள்ள வாட்டர்கேன் மற்றும் பல் துலக்கப் பயன்படுத்தப்படும் 'பிரஷ்' மூலம் இசை அமைத்துப் பாடல்களைப் பாடி அசத்தி வருகிறார். அங்குள்ள கரோனா பாதித்தவர்கள் திருமூர்த்தி பாடுவதை செல்போனில் படம் எடுத்தும் கைதட்டியும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

மேலும், மறைந்த எஸ்பிபியின் பாடல்களையும் பாடி அதற்கு விளக்கமும் தந்து அசத்தி வருகிறார் திருமூர்த்தி. தங்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதால் உருவான கவலையை திருமூர்த்தியின் பாடல் மறக்கச் செய்வதாக அவர்கள் நெகிழ்ந்து பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x