கருணாநிதியின் பெற்றோர் சிலைகளை அகற்ற முடிவு: தடை கோரிய மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

கருணாநிதியின் பெற்றோர் சிலைகளை அகற்ற முடிவு: தடை கோரிய மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
Updated on
1 min read

நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பெற்றோர்களின் சிலைகளை அகற்ற தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராதாபுரத்தைச் சேர்ந்த சேவியர் என்ற கவிஞர் மோசே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

திமுக தலைவர் கருணாநிதியின் தந்தை முத்துவேலர், தாயார் அஞ்சுகம் அம்மையார் ஆகியோரின் சிலைகளை ராதாபுரம் பஸ் நிலைய வளாகத்தில் அமைக்க ராதாபுரம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் இருவரின் சிலைகளை அமைக்க தமிழக அரசு 4.10.2007-ல் அனுமதி வழங்கியது. இதையடுத்து 16.10.2009-ல் ராதாபுரத்தில் கருணாநிதியின் பெற்றோரின் சிலைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், 1.10.2014-ல் நடைபெற்ற ராதாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில், கருணாநிதியின் பெற்றோரின் சிலைகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முறைப்படி அரசிடம் அனுமதி பெற்று சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த சிலைகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதம். எனவே, கருணாநிதியின் பெற்றோரின் சிலைகளை அகற்றுவது தொடர்பாக ராதாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். சிலைகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின், ஊராட்சி ஒன்றியக் குழு தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி பொதுநலன் மனு தாக்கல் செய்ய முடியாது. மனுதாரர் தனது கோரிக்கைக்காக ஊராட்சிகளின் இயக்குநர்/ நெல்லை மாவட்ட ஆட்சியரை அணுகலாம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in