

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியதால் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 58,948 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, 40,185 ஹெக்டேரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து வயல்களிலும் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பாபநாசம் பகுதியில் கணபதி அக்ரஹாரம், மணலூர், கபிஸ்தலம், சாலியமங்கலம், கோவிலூர், அருள்மொழிப்பேட்டை உள்ளிட்டபகுதிகளில் 200-க்கும் மேற்பட்டஏக்கரில் வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து, நெற்கதிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
பாபநாசம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால், நேற்று மாலை வரை மின்விநியோகம் இல்லாததால் அய்யம்பேட்டை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர்.
நெல் மூட்டைகள் தேக்கம்
குறுவை அறுவடை தீவிரமாக நடைபெற்ற நிலையில், அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் குவியல் குவியலாக கொட்டி வைத்துள்ளனர். தற்போது கொள்முதல் நிலையங்களில் வருடாந்திர கணக்குகள் முடிக்கும் பணி நடைபெறுவதால் கொள்முதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக நெல்மணிகளில் ஈரப்பதம் மேலும் அதிகரிப்பதால் தினமும் பகலில் விவசாயிகள் நெல்லை உலர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கணபதி அக்ரஹாரம் பகுதி விவசாயி விஜயராஜன் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல காவிரி உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீர் அதிமாக செல்கிறது. ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிவது தாமதமாகிறது. அறுவடை நேரத்தில் மழை பெய்வதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நெல்மணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் நெல்மணிகள் நிறம் மாறி தரம் குறைந்துவிடும் என்பதாலும், ஈரப்பதம் அதிகரிக்கும் என்பதாலும் நல்ல மகசூல் கிடைத்தும் விவசாயிகள் லாபத்தை பார்க்க முடியாத நிலை உள்ளது என்றார்.
திருவாரூர்
இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் 97 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, 50 ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்னும் 4 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், திருவாரூரை அடுத்த கருப்பூர், அலிவலம், சேமங்கலம், சித்தாநல்லூர், திருநகரம் ஆகிய கிராமங்களில் சுமார் 1,000 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துவிட்டதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.