

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது என்று அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
திமுக பொருளாளரான பின்னர் தனது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு நேற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, காட்டூரில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திலும், பின்னர் நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காட்டூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று கோட்டைக்கு செல்வது உறுதியாகிவிட்டது. இதில் எந்த சந்தேகமும், இரண்டாவது கருத்தும் கிடையாது. 2ஜி வழக்கில் இருந்து சம்பந்தப்பட்ட ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விசாரணை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். அரசியல் நிமித்தமாக மேல்முறையீடு வழக்குகள் போடப்படுகின்றன. வழக்குகளை சந்திக்க நாங்கள் தயார்.
அதிமுக முதல்வர் வேட்பாளரை பற்றி நான் கவலைப்படவில்லை. எம்ஜிஆர் இருந்தபோது அதிமுக இருந்தது. அதற்குப்பின் தேய்ந்து, தற்போது அந்தக் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் சில கட்சிகள் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் திமுகவில் மிக முக்கிய பணியில் இருக்கிறார். அவர் சேப்பாக்கம் தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்பதில்லை. தமிழகத்தில் எந்த தொகுதியில் அவர் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார் என்றார்.