

மத்திய அரசின் அனுமதி இன்றுடன் நிறைவடையும் நிலையில் கரோனா, மழை போன்ற காரணங்களால் கீழடி 6-ம் கட்ட அகழாய்வுப் பணியை முழுமையாக முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் பிப்.19 முதல் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 4 இடங்களிலும் 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. கீழடியில் விலங்கின எழும்புகள், கட்டிடச் சுவர்கள், மண்பானைகள், கழிவுநீர் கால்வாய்கள், இரும்பு உலைகள், 11 அடுக்கு உறைகிணறு ஆகியன கண்டெடுக்கப்பட்டன.
கொந்தகையில் குழந்தை மற்றும் பெரியவர்களின் எலும்புக் கூடுகள், முதுமக்கள் தாழிகள், கருவிகள், மணலூரில் சுடுமண் உலை, சிறிய, பெரிய எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. அகரத்தில் நீள வடிவப் பச்சை நிறப் பாசிகள், எடைக்கற்கள், 21 அடுக்கு உறைகிணறு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
6-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கால் மார்ச் 24 முதல் மே 19 வரை 57 நாட்கள் பணிகள் நிறுத்தப்பட்டன. அதேபோல் சமீபத்தில் பெய்த மழையால் 10 நாட்களுக்கு மேல் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் அகழாய்வுக்கான மத்திய அரசின் அனுமதி இன்றுடன் (செப்.30) நிறைவடைகிறது. இதையடுத்து குழிகள் தோண்டும் பணி நிறுத்தப்பட்டு, ஆவணப்படுத்தும் பணி மட்டும் நடக்க உள்ளது. கரோனா, மழையால் குறித்த காலத்துக்குள் கூடுதல் குழிகள் தோண்ட முடியாமல் போனது. இதனால் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.