Published : 30 Sep 2020 08:09 AM
Last Updated : 30 Sep 2020 08:09 AM

அரை நூற்றாண்டு காலம் ‘தி இந்து’ குழுமத்தில் பணியாற்றிய கே.நாராயணன் மறைவு

இந்து குழுமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த கே.நாராயணன்(88) (எ) கே.என். கோவையில் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

கே.நாராயணன், `தி இந்து' ஆங்கிலப் பத்திரிகையில் மிக நீண்டகாலம் செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் படித்த இவர், 1955-ல் இந்து பத்திரிகையில் கஸ்தூரிரங்கன் ஸ்காலராகச் சேர்ந்தார். 1956-ல் உதவி ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்ட இவர், 1978-ல் செய்தி ஆசிரியர் நிலைக்கு உயர்ந்தார்.

`தி இந்து' பத்திரிகை ஆசிரியர் ஜி.கஸ்தூரிக்கு நெருக்கமான இவர், 1990 வரை பத்திரிகையின் ஒட்டுமொத்த செய்திப் பிரிவு கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்தார். அதேபோல, 1984 முதல் 1996 வரை ஃப்ரன்ட்லைன் மாதமிருமுறை இதழில் அசோசியேட் எடிட்டராகவும் பணிபுரிந்தார்.

அவரது கடின உழைப்பு, ஒருங்கிணைத்துச் செல்லும் பண்பு, பிரச்சினைகளைக் கையாள்வதில் விரிவான அறிவு ஆகியவை இந்து குழுமத்தில் அவரது மதிப்பை உயர்த்தின. இளம் தலைமுறை செய்தியாளர்களை சிறப்பாக உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார்.

பிழைகளும், தவறுகளும் இல்லாத வகையில் செய்திகள் வெளியாக வேண்டுமென்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்த கே.நாராயணன், பக்க வடிவமைப்பிலும் மிகுந்த கவனமுடன் இருந்தார். அதேபோல, தொழில்நுட்ப விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்தினார்.

1996 ஆகஸ்ட் 31-ம் தேதி அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்றாலும், ஃப்ரன்ட்லைன் இதழின் ஆலோசகராகப் பொறுப்பு வகித்தார். 2003-ம் ஆண்டுக்குப் பிறகு `தி இந்து' பத்திரிகையின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

மேலும், 2006 மார்ச் 1-ம் தேதி `தி இந்து'வின் முதல் ரீடர்ஸ் எடிட்டராகப் பொறுப்பேற்ற இவர், 2009 ஜூன் 30-ம் தேதி வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு மனைவி, மகன் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x