

மாணவர்கள் கல்லூரி காலத்தை பயனுள்ளதாக்கிக்கொள்ள, பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10:30 மணிக்கு ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு ‘கல்லூரிக் காலங்கள்’ நிகழ்ச்சி மூலம் வழிகாட்டுகிறார்.
இளைஞர்களுக்கு கல்லூரி வாழ்க்கை முக்கியமானது. பள்ளிப் படிப்பு வரை கைவிரல் பிடித்து பெற்றோரும் ஆசிரியர் களும் அரவணைத்து அழைத்து செல்கின்றனர். அதற்குப் பின் அவர்களை யாரும் வழிநடத்த முன்வருவதில்லை. பள்ளிப் படிப்பு ஒருவனை தேர்வுக்கு தயார் செய்கிறது. கல்லூரிப் படிப்பே வாழ்க்கைக்கு தயார் செய்கிறது.
பள்ளியில் அனுபவித்த கட்டுப்பாடுகள் கல்லூரிகளில் தளர்த்தப்படுவதால், சுதந் திரத்தை தவறான வழியில் பயன்படுத்த தொடங்கிவிடு கின்றனர். சிலர் கல்லூரியில் படிப்பது மட்டுமே முக்கியம் என்று எண்ணுகின்றனர்.
அவர்கள் கல்லூரி வாழ்க்கையை எப்படி பயன் படுத்திக்கொண்டு தங்களை மேம்படுத்தலாம் என்பது குறித்து, பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:30 முதல் 11 மணி வரை ’கல்லூரிக் காலங்கள்’ நிகழ்ச்சி விளக்குகிறது.
இதில், மாணவர்கள் அருகில் அமர்ந்து தோள் மேல் கை போட்டு தோழமையுடன், கல்லூரி வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ளலாம் என்பதை தன் அனுபவங்கள் வைத்து பல்வேறு உதாரணங்கள் மூலம் விளக்குகிறார்.