Published : 30 Sep 2020 08:03 AM
Last Updated : 30 Sep 2020 08:03 AM

மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.12,250 கோடி வழங்கக் கோரி வழக்கு

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.12,250 கோடியை தமிழக அரசுக்கு உடனே வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஜி.சுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு நேரடியாக ஜிஎஸ்டி வரி வசூலிக்கும்போது, அதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிசெய்ய ஜிஎஸ்டி இழப்பீடு சட்டத்தையும் இயற்றியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மாநிலஅரசுகளின் வருவாய் இழப்பை சரிசெய்யும் விதமாக இந்த இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்கும். அதன்படி, 2 மாதங்களுக்கு ஒருமுறை எனவும், நிதியாண்டின் இறுதியிலும் வருவாய் இழப்பை கணக்கிட்டு, இழப்பீட்டு தொகையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.

ஆனால் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.12,250 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு அதிக அளவிலான தொகையை மத்திய அரசு கொடுக்காமல் இருப்பது, தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளை பாதிக்கும். மேலும் இது அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. எனவே ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.12,250 கோடியை தமிழக அரசுக்கு உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x