Published : 30 Sep 2020 08:01 AM
Last Updated : 30 Sep 2020 08:01 AM

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் தொடரும் சிக்கல்: இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை; நிர்வாகிகள் அடுத்தடுத்து சந்திப்பு; கட்சிப் பணிக்கான பேச்சுவார்த்தை என தகவல்

சென்னை

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பிலும் முடிவு எட்டப்படாத நிலையில், இருவரும் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஏற்கெனவே நிலவிவரும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த செயற்குழு கூட்டத்திலும் இது எதிரொலித்தது.

செயற்குழு கூட்டத்தில் ஆரோக்கியமான விவாதம் நடந்ததாக அமைச்சர்கள், நிர்வாகிகள் தெரிவித்தாலும், செயற்குழு நிகழ்வுகளால் ஓபிஎஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்புகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர்பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். வழக்கமாக, இந்த ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பங்கேற்கவில்லை.

அதேநேரம், ஓபிஎஸ் தன்னுடைய இல்லத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளான துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது, மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கமும் திடீரென அங்கு வந்தார். முதல்வரின் ஆலோசனை கூட்டத்துக்கு ஓபிஎஸ் வராததால், முதல்வர் தரப்பினர்தான் வைத்திலிங்கத்தை அங்கு அனுப்பி வைத்ததாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையில், அக்.7-ம் தேதிஎடுக்கப்பட வேண்டிய முடிவுகள் தொடர்பாகவே ஓபிஎஸ் இல்லத்தில் மூத்த நிர்வாகிகள் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சந்திப்பு முடிந்து வெளியில் வந்த துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், ‘‘கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. மீண்டும் அதிமுகதான் ஆட்சியமைக்கும். செயற்குழுவில் காரசாரமான விவாதம் நடந்தாலும், அது கட்சியின் வளர்ச்சிக்கானதுதான். ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் ஆதரவாக இருப்பேன். ’’ என்றார்.

கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியனுடன் தொடர்ந்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி கூறும்போது, ‘‘தொடர்ச்சியான கட்சிப் பணிகளுக்கான நிகழ்வுதான் இது’’ என்றார்.

இதற்கிடையில், அமைச்சர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோரும் ஓபிஎஸ் வீட்டுக்கு வந்து பேசினர்.

இந்நிலையில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வந்து ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், முதல்வர் பழனிசாமியையும் அவர் சந்தித்தார். அப்போது, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

இபிஎஸ் ஆலோசனை

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நேற்று மாலை திடீரென முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் கடம்பூர் ராஜு உள்ளிட்ட சிலரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் பெயர் நீக்கம்

சென்னை மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா தீவுத்திடலில் இன்று நடக்கிறது. இதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பதாக இருந்தது. இப்பணியில் இணைந்து செயல்படும் தனியார் நிறுவன அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயரும் இருந்தது. மாநகராட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட புதிய அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயருக்கு பதிலாக, அமைச்சர் பெஞ்சமின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை தேனி செல்ல இருந்த ஓபிஎஸ், பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னையிலேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. கட்சி நிர்வாகப் பொறுப்பை தன்னிடம் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ள ஓபிஎஸ், அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘‘இரு தரப்பினரும் பிடிவாதமாக உள்ளனர். முதல்வர் வேட்பாளர் யார் என்ற முடிவு அக்.7-ல்கூட எட்டப்படுமா என்பது சந்தேகமே. இரு தரப்புக்கும் வெளியில் இருந்தும் பல்வேறு அழுத்தங்கள் உள்ளன’’ என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x