

மியான்மரில் சிக்கியிருக்கும் மீனவர்கள், அக்டோபர் 7-ம் தேதி சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 9 மீனவர்கள் தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 14-ம் தேதி மியான்மர் கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு போதுமான உணவு மற்றும் இதர வசதிகள் அங்குள்ள இந்திய தூதரகம் வழியாக செய்து தரப்பட்டது.
வந்தே பாரத் மிஷன்
அங்கு தனிப்பட்ட நிகழ்வில் காணாமல் போன மீனவர் பாபுவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மியான்மரில் தற்போது உள்ள 8 தமிழக மீனவர்களையும் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் கடந்த திங்கட்கிழமை விமானத்தின் மூலம் டெல்லிக்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இந்நிலையில், மியான்மரில் வானிலை மோசமாக உள்ளதால் தமிழக மீனவர்கள் 8 பேரும் அக்டோபர் 7-ம் தேதி டெல்லி வழியாக சென்னை அழைத்து வரப்பட உள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.