

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்தில் செய்தித் துறை இயக்குநர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, நினைவு இல்லமாக்குவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. இதை எதிர்த்து தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நினைவு இல்லமாக்குவதற்கு தடையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
இதையடுத்து, நினைவு இல்லமாக்குவதற்கான சட்ட மசோதா செப்.16-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இந்நிலையில், செய்தித் துறை இயக்குநர் பொ.சங்கர், தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர், மயிலாப்பூர் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் வேதா நிலையத்துக்கு நேற்று வந்தனர். வீட்டில் இருந்த பொருட்களை ஆய்வு செய்து, நினைவு இல்லமாக்குவது குறித்து ஆலோசனை நடத்தினர். இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி நடைபெறும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.