

திட்டப் பணிகள் குறித்து ஊராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு விடுத்து தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுலகத்திற்குள் இன்று 7 பஞ்சாயத்து தலைவர்கள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த கோழிப்போர்விளையில் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குள் 7 பஞ்சாயத்துக்கள் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு நிறைவேற்றப்படும் திட்ட பணிகள் குறித்து பஞ்சாயத்து தலைவர்களுக்கு தகவல் முறையாக தெரிவிப்பதில்லை. தன்னிச்சையாகவே ஊராட்சி நிர்வாகத்தில் முடிவெடுக்கின்றனர். எனவே மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை இருப்பதாக குறறம் சாட்டி இன்று தக்கலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திற்குள் அமர்ந்து பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
முத்தலக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சிம்சன், கல்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் விஜிலா, மருதூர்குறிச்சி செல்வராணி, சடையமங்கலம் அருள்ராஜ், திக்கணங்கோடு ராஜம், நுள்ளிவிளை பால்ராஜ், ஆத்திவிளை அகஸ்டினா ஆகிய 7 பஞ்சாயத்து தலைவர்களும் 3 மணி நேரத்திற்கு மேல் இந்த உளளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்த தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மற்றும் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் அங்கு வந்து பஞ்சாயத்து தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகத்தினரின் சுற்றறிக்கை குறித்த தகவல்களை கூட தங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவிப்பதில்லை.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் அரசு ஊழியர்களை பணி நியமனம் செய்தது போன்ற குற்றச்சாட்டுகளை பஞ்சாயத்து தலைவர்கள் தெரிவித்தனர்.
அப்போது பஞ்சாயத்து தலைவர்களின் கோரிக்கைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.