

கேரள அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 என்று விலை நிர்ணயித்து கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.1,871. ஆனால், அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,918 என்றும் சன்னரக நெல்லுக்கு ரூ.1,958 என்றும் நிர்ணயித்திருப்பது சரியல்ல என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் இன்று விடுத்துள்ள அறிக்கை:
''தமிழ்நாடு அரசு 2020-21 ஆம் ஆண்டு நெல்லுக்கான விலையை அறிவித்திருக்கிறது. சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,918 என்றும் சன்னரக நெல்லுக்கு ரூ.1,958 என்றும் நிர்ணயித்திருக்கிறது. இந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்தி செலவு ரூ.1,871 என்று கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் தீர்மானித்திருக்கிறது.
மத்திய அரசு இந்த ஆண்டு நெல்லுக்கான விலையாக கடந்த ஆண்டை விட வெறும் 53 ரூபாய் மட்டுமே உயர்த்தியுள்ளது. இதன்படி சாதாரண ரகத்துக்கு ரூ.1,868ம், சன்னரகத்துக்கு ரூ.1,888 எனவும் தீர்மானித்திருக்கிறது. உற்பத்திச் செலவை மட்டுமே விலையாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை நிறைவேற்றிவிட்டோம் என்று தம்பட்டம் அடிக்கும் பாஜக அரசு நாடு முழுவதும் உள்ள உழவர்களை ஏமாற்றி வருகிறது என்பதற்கு இது உதாரணம். உற்பத்திச் செலவுக்கு மேல் 50 சதவீதம் உயர்த்தி தீர்மானித்திருந்தால் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,807 என்று விலை தீர்மானித்திருக்க வேண்டும். ஏறத்தாழ குவிண்டாலுக்கு 919 ரூபாய் விவசாயிகள் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு, இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சன்னரகத்துக்கு ரூ.70, சாதாரண ரகத்துக்கு ரூ.50 என்று வழக்கம்போல் அறிவித்திருப்பது எந்த விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல.
கேரள அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 என்று விலை நிர்ணயித்து கொள்முதல் செய்வதுடன் ஹெக்டேர் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2,000 வழங்கி வருகிறது. எனவே, நெல்லுக்கான விலை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து குவிண்டால் ஒன்றுக்கு 3,000 ரூபாய் என்று நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை நடைபெற்று பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சாலையோரங்களில் அடுக்கிக் கிடக்கின்றன. செப்டம்பர் 25-ம் தேதியிலிருந்து நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கின்றன.
எனவே, உடனடியாக நெல்கொள்முதல் மையங்கள் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், போதுமான, பணம், சாக்கு, ஊழியர்கள் போன்ற ஏற்பாடுகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. நனைந்து வீணாகிப் போன நெல்லுக்குரிய இழப்பீட்டை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது''.
இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.