Last Updated : 29 Sep, 2020 07:43 PM

 

Published : 29 Sep 2020 07:43 PM
Last Updated : 29 Sep 2020 07:43 PM

சிவகளை, ஆதிச்சநல்லூர் தொல்லியல் களங்களில் எம்.பி.,க்கள் கனிமொழி, சு.வெங்கடேசன் நேரில் ஆய்வு: அருங்காட்சியகம் அமைக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, வெங்கடேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி 

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களங்களை மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, சு.வெங்கடேசன் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த மே 25-ம் தேதி தொடங்கின. சிவகளையில் 31 முதுமக்கள் தாழிகளும், ஆதிச்சநல்லூரில் 24 முதுமக்கள் தாழிகளும் கிடைத்துள்ளன.

மேலும், கருப்பு, சிவப்பு மண் பாண்டங்கள், கிராவிட்டி குறியீடுகள், புள்ளிகளுடன் கூடிய மண் பாண்டங்கள், கரித்துண்டுகள், எலும்புகள் மற்றும் தாடைகள், நெல்மணிகள், நாணயங்கள், கூஜாக்கள், கழிவுநீர் கால்வாய் அமைப்பு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன.

இவைகள் அனைத்தும் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பல்வேறு ஆய்வு மையங்களுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் வரும் போது சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் பகுதியில் வசித்த பழங்கால தமிழர்கள் எந்த காலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்ற அகழாய்வுப் பணிகள் நாளையோடு முடிவடைய உள்ளன.

இந்நிலையில் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களங்களை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இரு இடங்களிலும் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள், கிடைத்த முதுமக்கள் தாழிகள் மற்றும் பல்வேறு பழங்காலப் பொருட்களை அவர்கள் பார்வையிட்டனர். தொல்லியல் துறை அலுவலர்கள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

அப்போது சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு பணிகளுக்கு காரணமானவர்களான எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வரலாற்று ஆசிரியர் சிவகளை மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆதிச்சநல்லூரில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற அகழ்வாராய்ச்சி முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

ஆதிச்சநல்லூரில் தற்போது அகழாய்வு செய்யப்படும் இடத்தின் எதிர் பகுதியில் உள்ள சுமார் 114 ஏக்கர் இடத்தில் முழுமையாக மத்திய அரசு அகழாய்வு செய்ய வேண்டும்.

இங்கு சேகரிக்கப்படும் பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தது போல் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பதை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார் அவர்.

வெங்கடேஷன் கூறும்போது, கீழடி நாகரிகரீகத்தை விட ஆதிச்சநல்லூர் நாகரீகம் சுமார் 300 ஆண்டுகள் பழமையான நாகரீகம். அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்களை பொதுமக்களின் பார்வைக்காக வைத்திடும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x