Published : 29 Sep 2020 07:33 PM
Last Updated : 29 Sep 2020 07:33 PM

தமிழகத்தில் அக்.31 வரை பொது முடக்கம்: தளர்வுகள், தடைகள் என்னென்ன?- முழு விவரம்

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அக். 31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு குறித்தும் தடை, தளர்வு குறித்தும் முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 29.9.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.10.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் குறிப்பாக கீழ்க்கண்ட பணிகளுக்குத் தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது.

*அரசால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

* தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 50 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 100 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இது தவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.

* அரசு மற்றும் அரசுத் துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வாரச் சந்தைகள் மட்டும் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்துச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பொது

· மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

· தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:

· பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்.

· திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும்.

· மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

· புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கான தடை நீடிக்கும்.

· மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.

அரசு கடந்த செப்டம்பர் மாதம் அதிக அளவு தளர்வுகள் வழங்கிய நிலையிலும், நோய்த் தொற்று வேகம் மாநில அளவில் குறைந்துள்ளது. நோய் இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் முகக் கவசத்தைக் கட்டாயம் அணிய வேண்டும்.

பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடித்தும், அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

திருமண விழாக்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், இறுதி ஊர்வலங்களிலும் மற்றும் பிற குடும்ப நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் வழிமுறைகளைக் கடைப்பிடித்து நோய்த் தொற்றினைத் தவிர்க்க வேண்டும்.

எனவே, பொதுமக்கள், அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன். நோய்த்தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த்தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x