Published : 29 Sep 2020 07:14 PM
Last Updated : 29 Sep 2020 07:14 PM

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் செப்.30 வரை 8-ம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில், ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் மார்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துகளின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் 30.9.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. எனினும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 29.9.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 30.9.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.10.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் பணிகள் தொடர்ந்து நடைபெற அனுமதி அளிக்கப்படுகிறது''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x