

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்தின் தேவைக்கேற்ப, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டும் குறைக்கப்பட்டும் வருகிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று (செப்.28) மாலை வரை விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக, டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கான காவிரி நீரின் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று இரவு 9 மணியளவில், விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று (செப். 29) பிற்பகலில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அணையில் இருந்து, கால்வாய்ப் பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 850 கன அடியாக நீடிக்கிறது.
இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 4,427 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலையில் விநாடிக்கு 5,145 கன அடியாக சற்று அதிகரித்திருந்தது.
120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று 97.99 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 96.95 அடியாக குறைந்திருந்தது. நீர் இருப்பு நேற்று 62.26 டிஎம்சியில் இருந்து இன்று காலையில் 60.95 டிஎம்சியாக குறைந்தது.