

நாகர்கோவில் மாநகர எல்லைக்குட்பட்ட வெள்ளாடிச்சிவிளை, இடலாக்குடி பகுதிகளில் மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல மாநகராட்சி ஊழியர்கள் தடை செய்கிறார்கள். இதைக் கவனித்துத் தடை எதுவும் இன்றி மாடு மேய்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்திடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ரவி 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''இந்தப் பகுதிகளில் சுமார் 35 குடும்பத்தினர் தொடர்ந்து கால்நடைகளை வளர்ப்பதன் மூலம் வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள். இவர்கள் தங்களது மாடுகளை நெடுஞ்சாலைகளுக்குக் கொண்டு வருவதில்லை. சுசீந்திரம் குளம், சுக்கரன் குளம், கீழ சரக்கல் குளம், சிவந்த குளம் ஆகிய உள் பகுதிகளில்தான் மாடுகளை மேய்த்து வருகின்றார்கள். கால்நடைகளை ஆசாத் நகர் வழியாகக் குளங்களுக்குக் கொண்டு செல்வார்கள். தற்போது இந்தத் தெரு வழியாக கால்நடைகளைக் கொண்டு செல்லக்கூடாது என்று தடை விதிக்கின்றனர்.
அத்துடன் மாநகராட்சி ஊழியர்களும், மாடுகளை மேய்க்கக் கொண்டு செல்லக் கூடாது என்றும் அவ்வாறு சென்றால் அபராதம் விதிப்போம் என்றும் கூறுகின்றனர். இதனால் ஏழை கால்நடை விவசாயிகள் மனவேதனையோடு இருந்து வருகிறார்கள். இவர்கள் கறவை மாடுகளை வைத்துதான் வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள். மாடுகளை மேய்க்கத் தடை போட்டால் இவர்களது வாழ்வு சூனியமாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகும். எனவே மாடுகளை மேய்க்க விதிக்கும் தடைகளை அகற்ற வேண்டும்'' என்றார்.
இது தொடர்பாக நாகர்கோவில் ஆணையர் ஆஷா அஜித்திடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.