Published : 29 Sep 2020 05:02 PM
Last Updated : 29 Sep 2020 05:02 PM

எம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

எம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 29) வெளியிட்ட அறிக்கை:

"இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்விக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ள போதிலும், அதன் பயன்களை தமிழ்நாட்டு மாணவர்கள் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் பெரும்பாலானவை பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுவதுதான் இதற்குக் காரணமாகும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்பை (எம்.பி.பி.எஸ்) பொறுத்தவரை அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் 15% இடங்களைத் தவிர மீதமுள்ள அனைத்து இடங்களும் தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் நிரப்பப்படும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை சிறுபான்மை கல்லூரிகளில் 50% இடங்களும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 65% அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். மீதமுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படும்.

தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் தமிழக அரசு நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்பதால், அந்த இடங்களில் முழுக்க முழுக்க தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர். அதில் எந்தச் சிக்கலும் இல்லை.

ஆனால், எம்.பி.பி.எஸ் படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும் அதிகாரம் தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாலும், அந்த இடங்களை யாரைக் கொண்டு வேண்டுமானாலும் நிரப்பலாம் என்பதாலும் அவை பிற மாநில மாணவர்களுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,905 இடங்களில், 1,165 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ளவற்றில் 520 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும், 220 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 520 இடங்களில் 70%, அதாவது சுமார் 370 இடங்கள் பிற மாநில மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. அதனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 370 மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்படுகிறது. இது பெரும் சமூக அநீதியாகும்.

அண்டை மாநிலமான கர்நாடகத்திலும், கேரளத்திலும் தமிழ்நாட்டை விட அதிக எண்ணிக்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அந்தக் கல்லூரிகளில் உள்ளூர் மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மொத்தமுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 85 விழுக்காடு உள்ளூர் மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படுகிறது. வெளிமாநில மாணவர்களுக்கு 15% இடங்கள் மட்டும்தான் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிலும் இதே போல் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், தமிழக அரசு இன்று வரை அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

மற்றொருபுறம், தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தமிழக அரசு கலந்தாய்வு மூலமாகவே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதன் மூலம் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குத் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்; மருத்துவக் கல்வி வணிகமயமாவது தடுக்கப்படுகிறது.

இதே முறையை எம்பிபிஎஸ் படிப்புக்கும் நீட்டிக்க வேண்டும். அவ்வாறு நீட்டிக்கும்போது, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் பணம் படைத்தவர்களை விட, தகுதியுடைய மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை எவ்வாறு முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றனவோ, அதேபோல், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் உள்ளூர் மாணவர்களைக் கொண்டே நிரப்பும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

அதேபோல், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையையும் தமிழக அரசு நடத்தும் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு மூலமாகவே மேற்கொள்ளும் வகையில் விதிகளைத் திருத்த வேண்டும்.

இதன் மூலம் மருத்துவக் கல்லூரியின் தரத்தை உயர்த்துவது மட்டுமின்றி, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் அதிக இடம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x