

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் ரத்தப் பரிசோதனை நிலையம் இல்லாததாலும், போதிய ஊழியர்கள் இல்லாததாலும் ரத்தப் பரிசோதனைக்காக நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். காய்ச்சல் வகை, ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால், மஞ்சள்காமாலை, தைராய்டு மற்றும் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளின் பாதிப்பு உள்ளிட்டவை அறிந்து கொள்ள ரத்த பரிசோதனை அவசியமாகிறது.
இதனால் புறநோயாளிகள் பிரிவுக்கு வருவோரில் பெரும்பாலானோரை மருத்துவர்கள் ரத்தp பரிசோதனை செய்யp பரிந்துரை செய்கின்றனர்.
ஆனால் புறநோயாளிகள் பிரிவில் ரத்தப் பரிசோதனை நிலையம் இல்லை. பரிசோதனை நிலையமோ மருத்துவக் கல்லூரி டீன் அலுவலகம் அருகே அமைந்துள்ளது.
முதியோர் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதாலும், பரிசோதனை நிலையத்தை கண்டுபிடிப்பதிலும் சிரமப்படுகின்றனர்.
மேலும் பரிசோதனை நிலையத்திலும் போதிய ஊழியர்கள் இல்லை.
இதனால் ரத்தப் பரிசோதனை எடுப்பதற்கு முன்பு, நோயாளிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்வதற்கும், பரிசோதனை செய்தபிறகு முடிவுகளை நோயாளிகளுக்கு வழங்குவதற்கும் ஒரே ஒரு ஊழியரை மட்டுமே நியமித்துள்ளனர்.
இதனால் நோயாளிகள் நீண்டநோரம் காத்திருக்க வேண்டியநிலை உள்ளது. மேலும் ரத்தப் பரிசோதனை முடிவுகள் மறுநாளே வழங்கப்படுகின்றன.
மறுநாளிலும் நீண்ட நேரம் காத்திருந்து ரத்தப் பரிசோதனை முடிவு பெற்று செல்வதற்குள் புறநோயாளிகள் பிரிவில் உள்ள மருத்துவர்கள் சென்றுவிடுகின்றனர். இதனால் பரிசோதனை முடிவுகளை மருத்துவர்களிடம் காட்டி, மருந்துகளை வாங்குவதற்கு மூன்றாவது நாள் மீண்டும் வர வேண்டியுள்ளது.
இதனால் புறநோயாளிகள் மூன்று நாட்கள் அலைய வேண்டியுள்ளது. இதையடுத்து புறநோயாளிகள் பிரிவு அருகே ரத்த பரிசோதனை நிலையம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.