

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு வழக்கு நாட்குறிப்பை திறம்பட எழுதுவது குறித்த 5 நாள் புத்தாக்க பயிற்சி வகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகள் குறித்த வழக்கு நாட்குறிப்பு எவ்வாறு திறம்பட எழுத வேண்டும், வழக்கு நாட்குறிப்பில் எழுதப்படும் வழக்குகளின் விவரங்களின் மூலம் எதிரிக்கு தண்டனை பெறும் வகையில் எவ்வாறு வழக்கு நாட்குறிப்பை கையாள வேண்டும் என்பவை பற்றிய 5 நாள் புத்தாக்க பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு உட்பட 58 காவல் நிலையங்களில் இருந்து, காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை ஒரு காவல் நிலையத்துக்கு 6 பேர் வீதம் மொத்தம் 348 பேருக்கு 6 பிரிவுளாக தலா 5 நாட்கள் பயிற்சிளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி 58 காவல் நிலையங்களில் இருந்து தலா ஒருவர் வீதம் 58 பேருக்கு முதற்கட்ட பயிற்சி இன்று தொடங்கியது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் மாவட்ட குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் ஜெரால்டுவின் மற்றும் தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா ஆகியோர் பயிற்சியளித்து வருகின்றனர்.
இந்த புத்தாக்க பயிற்சி வகுப்பில் காவல்துறையினருக்கு வழக்கு நாட்குறிப்பை சிறந்த முறையில் எவ்வாறு எழுத வேண்டும் என்பது பற்றி அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பழனிச்சாமி சிறப்பு விரிவுரையாளராக கலந்து கொண்டு பயிற்சியளித்தார்.