நான்கு வழிச்சாலை பணிக்காக பெரியார், வைகை கால்வாய் மதகுகளை இடிக்க உயர் நீதிமன்றம் தடை

நான்கு வழிச்சாலை பணிக்காக பெரியார், வைகை கால்வாய் மதகுகளை இடிக்க உயர் நீதிமன்றம் தடை
Updated on
1 min read

நான்கு வழிச்சாலை பணிக்காக கீழையூர் 12-வது பெரியார் வைகை கால்வாய் மதகுகளை இடிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலூரைச் சேர்ந்த மாதவன், மாரிமுத்து ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் 12-வது பெரியார் வைகை கால்வாய் மதகு உள்ளது. இந்த மதகுகள் வழியாக பத்துக்கு மேற்பட்ட கிளை கால்வாய்கள் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது.

இப்பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. நான்கு வழிச்சாலைக்காக 12-வது பெரியார் வைகை கால்வாய் மதகை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் மேலூர் பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும். எனவே விவசாயிகள் நலனுக்காக தண்ணீர் செல்ல மாற்று ஏற்பாடுகளை செய்த பிறகு, மதகுகளை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். அதுவரை கீழையூர் 12வது பெரியார் வைகை கால்வாய் மதகுகளை இடிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் 12வது பெரியார் வைகை கால்வாய் மதகுகளை இடிக்க இடைக்காலத் தடை விதித்து விசாரணையை அக். 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in