Last Updated : 29 Sep, 2020 03:13 PM

 

Published : 29 Sep 2020 03:13 PM
Last Updated : 29 Sep 2020 03:13 PM

குற்றச் செயல்களைத் தடுக்க தென்காசி நகரில் 200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள்: காவல்துறை நடவடிக்கை

தென்காசி

தென்காசி நகரின் முக்கிய வீதிகளில் பாதுகாப்புக்காகவும், குற்றச் செயல்களைக் கண்காணிக்கவும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக வியாபாரிகளுடன் தென்காசி நகர காவல்துறையினர் ஆலோசனை நடத்தினர்.

தென்காசியில் பிரதான சாலையில் உள்ள மர அறுவை ஆலை அதிபர் வீட்டுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகுந்த 2 மர்ம நபர்கள், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கட்டிப் போட்டு, வீட்டில் இருந்த 100 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

அந்த வீட்டில் கண்காணிப்புக் கேமரா இல்லாததால், அந்த சாலையில் உள்ள மற்ற கட்டிடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில், சந்தேக நபர்கள் 2 பேர் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அவர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்ததாலும், மற்றொருவர் பர்தா அணிந்திருந்ததாலும் முகத்தை அடையாளம் காண முடியவில்லை. கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தென்காசி நகரின் முக்கிய வீதிகளில் பாதுகாப்புக்காகவும், குற்றச் செயல்களைக் கண்காணிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக வியாபாரிகளுடன் தென்காசி நகர காவல்துறையினர் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்துக்கு, தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஏராளமான வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் ஆடிவேல் கூறும்போது, “தென்காசியில் சமீபத்தில் கொள்ளை நடந்த வீட்டில் ஒரு கண்காணிப்பு கேமராக்கள் கூட இல்லை.

இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அந்த வீட்டில் புகுந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கு ஒன்றில் குற்றவாளியை கைது செய்து விசாரித்தபோது, வீட்டில் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா என்பதை நோட்டம் விட்டு, கண்காணிப்பு கேமரா இல்லாத வீட்டில் திருடியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நல்ல வசதியானவர்கள் வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்காமல் உள்ளனர். இது திருடுபவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது. கண்காணிப்பு கேமராக்கள் வைத்தால் குற்றங்களைக் குறைக்கலாம்.

கண்காணிப்பு கேமராக்களின் அவசியத்தைப் பொதுமக்கள் உணர்ந்து தங்கள் வீடு, நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

தற்போது முதல்கட்டமாக சுமார் 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தென்காசியில் அனைத்து பகுதிகளிலும் சுமார் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் தங்கள் வீடு, கடை, நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். தென்காசி ஹவுசிங் போர்டு பகுதியில் குடியிருப்போர் சங்கங்களிடம் பேசி, 18 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x