

புதுச்சேரி அரசு மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி காரைக்கால் மாவட்டத்தில் 5 இடங்களில் பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சீன நிறுவனத் தயாரிப்பு மின் மீட்டர்களை அகற்றிவிட்டு புதிய மின் மீட்டர்களைப் பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மின்துறை அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று (செப். 29) மின்துறை அலுவலகங்களை முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமலைராயன்பட்டினம் மின்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் நிரவி-திருப்பட்டினம் தொகுதி தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். புதுச்சேரி மாநிலத் துணைத்தலைவர் எம்.அருள்முருகன், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட நேரு நகர் மின்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தொகுதி தலைவர் விஜயபாஸ்கர், காரைக்கால் வடக்கு தொகுதி மதகடியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தொகுதி தலைவர் சுரேஷ் கண்ணா, திருநள்ளாற்றில் தொகுதி தலைவர் கந்தபழனி, கோட்டுச்சேரியில் நெடுங்காடு தொகுதி தலைவர் காமராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.