Published : 29 Sep 2020 02:52 PM
Last Updated : 29 Sep 2020 02:52 PM

சேகர் ரெட்டிக்கு எதிரான ஊழல் வழக்கு; ஆதாரமில்லை என முடித்துவைப்பது அதிர்ச்சியளிக்கிறது: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை

சேகர் ரெட்டிக்கு எதிரான ஊழல் வழக்கை ஆதாரமில்லை எனக் கூறி முடிக்கவைத்து, மத்திய பாஜக அரசு அதிமுகவுக்கு ‘அன்புப் பரிசு’ அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

''மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிரான 247.13 கோடி ரூபாய் ஊழல் வழக்கிற்கு ஆதாரமில்லை என்று, அதிமுக செயற்குழு நடைபெற்ற நேற்றைய தினம் (28.9.2020) சிபிஐ நீதிமன்றத்தில் கூறி, அந்த வழக்கை முடித்து வைத்து மத்திய பாஜக அரசு ஒரு “சிறப்புப் பரிசை” அதிமுகவிற்கு வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

“துண்டுச்சீட்டை” வைத்து “துப்புத் துலக்கும்” ஆற்றல் படைத்த சிபிஐ அமைப்பிற்கு, 170 பேருக்கு மேற்பட்ட சாட்சிகளை விசாரித்த பிறகும், 800-க்கும் மேற்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்த பிறகும், “ஆதாரம்” கிடைக்கவில்லை; 2000 ரூபாய் புதிய நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து சேகர் ரெட்டிக்கு கொடுக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வங்கி அதிகாரியைக் கூட வழக்கில் ஏன் குற்றவாளியாகச் சேர்க்கவில்லை என்று உயர் நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவிற்கு ஒரு விசாரணையை நடத்தி, இப்படியொரு சிறப்புப் பரிசு கிடைத்திருக்கிறது என்றால், இந்தப் பரிசை வழங்கியது சிபிஐ என்ற அமைப்பு என்பதை விட, மத்திய பாஜக அரசுதான் என்று அடித்துச் சொல்ல முடியும். முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நெருக்கமான சேகர் ரெட்டி வழக்கில் மட்டும்தான், “வங்கிகள் கொடுத்த நோட்டுகளுக்கு சீரியல் நம்பரைக் கண்டுபிடிக்க முடியாத” அதிசயம் நடந்திருக்கும்!

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவ் அலுவலகத்திலேயே ரெய்டு நடத்தப்பட்டது. அவர் வீடும் ரெய்டுக்குள்ளானது. ஆனாலும், அவர் காப்பாற்றப்பட்டார். ஏனென்றால் “இபிஎஸ்-ஓபிஎஸ்” ஆகிய இருவருக்கும், அதிமுகவின் ஊழல்களுக்கும்தானே மத்திய பாஜக அரசு “உற்ற தோழனாக” நின்று, உரிமை மிக்க தோழனாக, கடந்த நான்கு ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறது.

கரூர் அன்புநாதன் வீட்டில் ரெய்டு செய்யப்பட்டு, 4.77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதனால் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தேர்தல் ரத்தானது. பிறகு “570 கோடி ரூபாயுடன்” திருப்பூரில் கண்டெய்னர்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் “திருப்பூர் கண்டெய்னர்” வழக்கினை சிபிஐ “அம்போ”வெனக் கைவிட்டது. ஒரு கீழ்மட்ட வங்கி அதிகாரி அவ்வளவு கோடிகளுக்கு உரிமை கொண்டாடி, அந்த “கண்டெய்னர் பணக் கடத்தல்” நியாயமாக்கப்பட, சிபிஐ-யை மத்திய பாஜக அரசே பயன்படுத்தியது.

அடுத்தது “குட்கா டைரி” ஊழல் வழக்கு! 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு, 40 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் என்ற மக்களின் உயிரைப் பறிக்கும் “குட்கா வழக்கில்”, சென்னை உயர் நீதிமன்றம் - ஏன் உச்ச நீதிமன்றமே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று “கொத்தாக” டைரியே கிடைத்தது. ஆனால் அத்தனை “விசாரணை”களும் முடக்கப்பட்டு; - “குட்கா டைரியில்” இடம்பெற்றிருந்த அமைச்சரே விடுவிக்கப்பட்டார்.

ராமமோகனராவும் விடுவிக்கப்பட்டார். கீழ் மட்ட அதிகாரிகள் மீது மட்டும் இப்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரின் 250 கோடி ரூபாய் குவாரி வரி ஏய்ப்பும் கண்டு கொள்ளப்படாமல், திரை போட்டு மறைக்க சிபிஐ பணிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தேர்தலில், 80 கோடி ரூபாய்க்கு மேல் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கும் பட்டியல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்டது; தேர்தலே ரத்து செய்யப்பட்டது. முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அரை டஜன் அமைச்சர்களுக்கு மேல், அந்த ஊழல் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள்.

காவல்துறைக்குத் தலைவரான முதல்வர் பெயரே உள்ள அந்த ஊழல் பட்டியலை, தேர்தல் ஆணையம் சிபிஐக்கு அனுப்பவில்லை; மாறாக அவரிடமே கொடுத்தது. “நீங்களே வழக்கை விசாரித்து முடித்துக் கொள்ளுங்கள்” என்ற ஒரு வாய்ப்பை வழங்கியது. விளைவு, வழக்கிற்குச் சம்பந்தமே இல்லாத ஒருவர் போட்ட மனுவைக் காரணம் காட்டி - சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் அந்த வழக்கு ‘க்ளோஸ் ’ பண்ணப்பட்டது.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கைப்பற்றப்பட்டதாக - 16 மாதங்களுக்குப் பிறகு சிபிஐயிடம் புகாரைக் கொடுத்துள்ள தேர்தல் ஆணையமோ, வருமான வரித்துறையோ- இந்த அளவுகோலை, ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏன் கடைப்பிடிக்கவில்லை? இதில் வங்கி அதிகாரிகள் மீது வழக்குப் போடும் சிபிஐ ஏன் சேகர் ரெட்டி விவகாரத்தில் வங்கி அதிகாரிகள் மீது வழக்குப் போடவில்லை? இதுதான் அதிமுகவிற்கும்- பாஜகவிற்கும் உள்ள ஊழல் கூட்டணி ரகசியம்.

250-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட “பொள்ளாச்சி” வழக்கு, சிபிஐக்குப் போனது. ஆளும் அதிமுகவினர் அக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று புலனாய்வு பத்திரிகைகள் எல்லாம் செய்தி வெளியிட்டன. அதிமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெயர்களே பத்திரிகைகளில் வெளிவந்தன, அதுவும் புகைப்படங்களுடன் புலனாய்வுப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகள் ஆகின.

ஆனால், எந்த அதிமுக வி.ஐ.பி.களையும் தொடாமல், ஒரு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அதிலிருந்தும் அதிமுகவைக் காப்பாற்ற சி.பி.ஐ. அமைப்பை பாஜக அரசு பயன்படுத்தி, இளம் பெண்களுக்கு எதிரான குற்றமே மறைக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்ல - “கோடநாடு எஸ்டேட் ரெய்டு ஊழல்கள்” இன்னும் வெளிவரவில்லை. “கோடநாடு கொலைகளில்” இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது தமிழக ஆளுநரிடம் கொடுத்த ஊழல் புகார்கள் எல்லாம் மூட்டை கட்டி வைக்கப்பட்டு, தூசு படிந்து விட்டது.

100 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட முதல்வர் பழனிசாமியின் துறையான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரர் செய்யாத்துரை நாகராஜன் மீதான வருமான வரித்துறை ரெய்டு - அவருக்கும் துறை அமைச்சருக்கும் உள்ள ஊழல் தொடர்புகளை, இன்னும் வருமான வரித்துறை வெளியிலும் விடவில்லை, துறை அமைச்சரும் பொது ஊழியர்தானே என்று அதை சிபிஐ விசாரணைக்கும் அனுப்பியதாகத் தெரியவில்லை.

அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைத்ததைப் போல, தற்போது 6 லட்சம் போலி விவசாயிகளைச் சேர்த்து 110 கோடி கொள்ளையடித்த “பி.எம். கிசான் ஊழல்”, தற்காலிகமாகப் பணியில் சேர்க்கப்பட்ட சில ஊழியர்களின் ஊழல் என்று பாஜக அரசும் - அதிமுக அரசும் போட்டி போட்டுக்கொண்டு, “பூசி மெழுகி” மறைத்துக் கொண்டிருக்கின்றன.

“கிசான் திட்டத்தில்” பணத்தை அனுப்புவது மத்திய அரசு. அதற்கான பயனாளிகளைத் தேர்வு செய்வது அதிமுக அரசு. ஆனால் இருவருமே “ஊழல் பணம் ரெக்கவரி செய்யப்படுகிறது” என்று கூறி - அதிமுக அரசின் ஊழலை மூடி மறைக்க மத்திய பாஜக அரசு முனைந்து மட்டும் அல்ல; முழு மனதுடன் நாடாளுமன்ற விவாதங்களிலேயே காப்பாற்றி, “காவலாளியாக” நிற்கிறது.

தமிழ்நாட்டில் முதல்வர் பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் தினமும் செய்யும் ஊழலுக்கு உற்ற பாதுகாவலாளி யார் என்றால், சாட்சாத் மத்திய பாஜக அரசுதான், அதனால்தான் 570 கோடி ரூபாய் திருப்பூர் கண்டெய்னர் வழக்கில் தொடங்கி - இன்று நடைபெறுகின்ற பி.எம். கிசான் ஊழல் வரை அதிமுக அரசுக்கு முட்டுக்கொடுத்து, பாதுகாத்து வருகிறது மத்திய பாஜக அரசு.

தமிழகத்தில் அதிமுகவுடன் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வைத்த கூட்டணிக்காகவும் - இனி 2021-ல் அதிமுகவுடன் வைக்கும் கூட்டணிக்காகவும் - “விரும்பிய எண்ணிக்கையில் இடங்களைப் பெறுவதற்கும்” தான், இருவருக்கும் இடையில் வெளிப்படையான இந்த “ஊழல் பாதுகாப்பு ஒப்பந்தமா”? மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதத் திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்தி - விவசாயிகளை வஞ்சித்திட இந்த ஒப்பந்தமா? மாநில உரிமைகளைப் பறித்து - அதிமுக அரசைத் தங்களின் அடிமையாக வைத்துக்கொண்டு - மதவெறி அஜெண்டாவை - இந்தித் திணிப்பை தமிழகத்தில் புகுத்துவதற்காக இந்த ஒப்பந்தமா? “அதிமுகவின் ஊழல் ஆட்சி தாராளமாக நடக்கட்டும்.

தமிழ்நாடு எப்படியோ கெட்டுக் குட்டிச்சுவராகட்டும்”என்று அனுமதித்துள்ள மத்திய பாஜக அரசுக்கு இவற்றுக்கும் மேலாக வேறு ஏதேனும் “திரைமறைவு ஒப்பந்தம்” இருக்கிறதா? ஊழல்… ஊழல்... என்று ஊர் முழுக்க பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, “ஊழல் பெருச்சாளிகளான” முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுக அரசை கட்டிக் காப்பாற்றுவது.

பாதுகாத்து நிற்பது - சிபிஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை பிசுபிசுக்க வைப்பது ஏன்? ஏன்? - இந்தக் கேள்வியைத் தமிழ்நாடே ஒன்றிணைந்து கேட்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உரிய உண்மையான பதிலைச் சொல்வாரா?”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x