தென்காசி காய்கறி சந்தையை நாளை முதல் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி

தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த காய்கறி சந்தை.| கோப்புப் படம்.
தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த காய்கறி சந்தை.| கோப்புப் படம்.
Updated on
1 min read

தென்காசியில் உள்ள காய்கறி சந்தையை மீண்டும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக தென்காசியில் உள்ள நகராட்சி காய்கறி சந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசி பழைய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. பேருந்து நிலையமும், சந்தையும் ஒரே இடத்தில் இயங்கி வந்ததால் பயணிகளுக்கும், வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையூறு ஏற்பட்டது.

இதனால் மீண்டும் பழைய இடத்துக்கே சந்தையை மாற்ற வேண்டும் என்று வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இருப்பினும் சந்தையை பழைய இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வியாபாரிகள் மற்றும் சிஐடியு சங்கம் இணைந்து நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தென்காசி நகராட்சி அதிகாரிகள் மற்றும் சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபற்றது.

இதில், 30-ம் தேதி (நாளை) முதல் மீண்டும் நகராட்சி சந்தையில் கடைகளை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் 55 கடைகள் இருக்கும் நிலையில், இடைவெளி தேவை காரணமாக 35 காய்கறி கடைகள் மற்றும் 2 சிக்கன் கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். சந்தைக்கு வருபவர்கள், வியாபாரிகள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சந்தைக்குள் வருபவர்களுக்கு சானிடைசர் அல்லது கை கழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும்.

கழிவுகளைக் கண்ட இடத்தில் போடாமல் தனித்தனியாக பிரித்து கடை வாசலில் வைக்க வேண்டும். கழிவுகளை நகராட்சி பணியாளர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். வெளியாட்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. விதிமுறைகள் மீறப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். சந்தை வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in