

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காலத்தில் 68 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்து சாரதா தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்தும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து வாகனம் விழிப்புணர்வு பிரச்சாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள மாற்று சமரச தீர்வு மையத்தில்
நடைபெற்றது.
இந்த முகாமில் விருதுநகர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி மாரியப்பன் வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி முத்து சாரதா தலைமை வகித்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "எவ்வளவுதான் முகாமிட்டும் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. எனவே கூடுதலாக வாகனங்கள் மூலம் குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் விதமாக பிரச்சார ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு மற்றும் பொது முடக்க காலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 68 குழந்தைத் திருமணம் நடக்க இருந்ததை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது.
என்னதான் நோயினால் பாதிக்கப்பட்டு மக்கள் இருந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அதற்கு உதாரணம் தான் இதுபோன்ற குழந்தைத் திருமணம் நிகழ்வு தான்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி தன சுமதி சாய்பிரியா, குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி பரிமளா, விரைவு மகளிர் நீதிமன்றம் அமர்வு நீதிபதி காஞ்சனா, நிரந்தர மக்கள் நீதி மன்ற தலைவர் மற்றும் அமர்வு நீதிபதி ஸ்ரீதரன், கூடுதல் சார்பு நீதிபதி சுந்தரி, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.