Published : 29 Sep 2020 12:25 PM
Last Updated : 29 Sep 2020 12:25 PM

அதிமுக செயற்குழுக் கூட்டம்; பூகம்பம் வெடித்தால் குளிர்காயலாம் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்

சென்னை

அதிமுக செயற்குழுவில் பூகம்பம் வெடித்தால் அதில் குளிர்காயலாம் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை முன்னாள் மேயர் சிவராஜனின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மின்ட் தங்க சாலையில் உள்ள அவரது சிலைக்குக் கீழ் வைக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றம் செல்லவில்லையென்றால், திமுக செல்லும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

வேளாண் சட்டங்கள் குறித்து ஸ்டாலின் வெளியிடும் அறிக்கைகள் உண்மைக்கு மாறானவை. வேளாண் மக்களைத் திசை திருப்பும் செயல். இச்சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது. விலை நிர்ணயம் பாதிக்காது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என்ற வகையில்தான் இந்தச் சட்டங்கள் இருக்கின்றன. நீண்ட விவாதம் நடத்தி, அறிக்கை கொடுத்து, முதல்வர் பேட்டியும் அளித்திருக்கிறார். அவற்றைக் கேட்டும் கேட்காதது போல இருக்கின்றனர்.

விவசாயிகளின் ஒட்டுமொத்த உரிமையைக் காவு கொடுத்தது திமுக. 17 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஏன் காவிரி நீர் உரிமையைப் பெற்றுத்தரவில்லை? கர்நாடகா அணை கட்டியதை ஏன் தடுக்கவில்லை? அணை கட்டுவதை எதிர்த்து விவசாயிகள் உச்ச நீதிமன்றம் சென்றதை, சர்க்காரியா கமிஷனுக்குப் பயந்து அதனைத் தடுத்தது திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி. தமிழகத்தின் உரிமைகளைக் காவு கொடுத்தது திமுக. இன்று விவசாயிகள் நலனுக்காக திமுக பேசுவது வெட்கக்கேடான, வேதனையான செயல்.

முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் முதல்வராவதற்கான தகுதிகள் இல்லையென உதயநிதி விமர்சித்துள்ளாரே?

உள்ளத்தில் என்ன இருக்கிறதோ அதுதான் வார்த்தைகளாக வரும். அரசியலில் நாகரிகம், பண்பாடு வேண்டும். நேற்று நடைபெற்றது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் 5 மணி நேரம் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. பூகம்பம் வெடிக்குமா அதில் குளிர்காயலாமா என்றிருந்தவர்களின் தலையில் இடி விழுந்துவிட்டது.

நேற்றைய கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றதா?

நேற்று ஜனநாயக ரீதியிலான ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றன. அதிமுகவில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. மற்றவர்கள் கருத்து கூறினார்கள். அவை ஆரோக்கியமானதாக இருந்தன. தங்களுக்கு ஆதாயம் கிடைக்குமா என சிலர் எதிர்பார்த்தனர். அக்.7 அன்று உரிய முடிவு அறிவிக்கப்படும்.

அக்.7 அன்று நிச்சயம் அறிவிப்பு வருமா?

அறிவிப்பு வரும். மேலும், அதுகுறித்துச் சொல்ல முடியாது. செயற்குழுவில் என்ன நடந்தது என்பதை நான் விவாதிக்க முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்.

செயற்குழுவில் சசிகலா விடுதலை குறித்து ஆலோசிக்கப்பட்டதா?

எதற்கு அதுகுறித்துப் பேச வேண்டும். அது தேவையில்லாதது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x