

மதுபோதையில் ஓட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை மாநகரில் போக்குவரத்து காவல் துறையினர், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிக்க ‘பிரீத் அனலைசர்’ என்ற கருவியை பயன்படுத்திவந்தனர். கரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட அச்சம் காரணமாக, இந்த கருவியை பயன்படுத்துவதை காவல்துறையினர் கடந்த 6 மாதங்களாக தவிர்த்து விட்டனர். இதனால் மதுபோதையில் வரும் வாகன ஓட்டுநர்கள் மீது காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லாலி சாலை மற்றும் முத்தண்ணன் குளம் சாலை ஆகிய இடங்களில் மது போதையில் வாகனங்களை ஓட்டி வந்த இருவர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர். காவல் துறையினர் சோதனை செய்வதில்லை என்பதால், மதுபோதையில் வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து,
காவல் துறையினர் மீண்டும் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) முத்தரசு கூறும்போது,‘‘பிரீத் அனலைசர் கருவியை பயன்படுத்தாவிட்டாலும், மதுபோதை வாகன ஓட்டுநர்களை பிடிக்க மாற்றுத் திட்டம் நேற்று முன்தினம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஓட்டுநர்களின் நடவடிக்கை மூலம் மது அருந்தியிருப்பது தெரியவந்தால், அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறது. வழக்கமான நடைமுறைகளுக்கு பின்னர், குறிப்பிட்ட நாட்கள் கழித்தே, அவர்களின் வாகனம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன’’ என்றார்.