Published : 29 Sep 2020 10:36 AM
Last Updated : 29 Sep 2020 10:36 AM

நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டவிடாமல் சிறுவாணி அணையை 4 முறை திறந்துவிட்ட கேரள அதிகாரிகள்

சிறுவாணி அணையை நிரம்ப விடாமல் ஒரே மாதத்தில் 4 முறை மதகுகளை திறந்து கேரள அரசு தண்ணீரை வெளியேற்றியது. இது தொடர்பாக, தமிழக அரசுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கடிதம் அனுப்பியுள்ளார்.

கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை, மேற்கு தொடர்ச்சி மலையில், கேரள மாநில பகுதியில் அமைந்துள்ளது. அணையில் இருந்து பெறப்படும் குடிநீர், சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, மாநகரின் ஒரு பகுதி, 7 பேரூராட்சிகள், 28 வழியோர கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அணையில் இருந்து தினமும் சராசரியாக 100 எம்.எல்.டி குடிநீர் பெறப்படுகிறது.

சிறுவாணி அணையில் முன்பு முழுக் கொள்ளளவான 49.50 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு பிறகு, அம்மாநில அரசு வெளியிட்ட உத்தரவைத் தொடர்ந்து 45 அடி உயரம் வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. நடப்பு தென்மேற்கு பருவமழைக்காலத்தில் சிறுவாணி அணை மற்றும் அடிவாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று நீர்மட்டம் 44.61 அடியாக இருந்தது.

45 அடியை தாண்டி நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள் அடிக்கடி தண்ணீரை திறந்து வெளியேற்றினர். செப்டம்பர் மாதத்தில் மட்டும் 4 முறை திறந்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கேரளாவுக்கு சென்று நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக அம்மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ‘சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநில அரசுகளும் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது, ‘‘சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக 4 நாட்களுக்கு முன்னர் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அதில் அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x