

விருதுநகர் அருகே குந்தலப்பட்டியில் இயங்கும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 25-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஆலையில் நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மருந்து கலவை அறையில் பட்டாசுக்கான மருந்துகளை தயாரித்தபோது உராய்வு ஏற்பட்டு திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. அதில், அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
விபத்தின்போது அக்குறிப்பிட்ட அறையில் மருந்து கலவை தயாரித்துக்கொண்டிருந்த செங்குன்றாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (55) படுகாயமடைந்தார். விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிருஷ்ணகுமாரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் விபத்து: புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் புதுக்குளம் அந்தோணியார் வீதியை சேர்ந்த நெப்போலியன், தனது வீட்டின் குடோனில் பட்டாசுகளை இருப்பு வைத்துள்ளார். இதற்கு அவர் எந்த அனுமதியும் பெறவில்லை. நேற்று இரவு திடீரென்று இப்பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் பட்டாசு வைக்கப்பட்டிருந்த வீடும், அதை ஒட்டியுள்ள நெப்போலியன் வீடும் இடிந்து தரை மட்டமாயின.
இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய நெப்போலியன், அவரது மனைவி பத்மாவை தீயணைப்புத் துறையினர், போலீஸார் மற்றும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த நேரத்தில் நெப்போலியனின் 2 மகள்களும் வெளியே சென்றிருந்ததால் உயிர் தப்பினர்.