Published : 29 Sep 2020 07:31 AM
Last Updated : 29 Sep 2020 07:31 AM

‘மும்முறை முதல்வரே.. சாமானிய முதல்வரே..’ ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ், இபிஎஸ் பதவியேற்ற பிறகு நடந்த இந்த செயற்குழு கூட்டத்தில், இருவரையும் வரவேற்க தொண்டர்கள் அதிக அளவில் திரண்டனர். சென்னை மியூசிக் அகாடமி முதல், அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு, மற்றும் சாலையின் இரு மருங்கிலும் தொண்டர்கள் அதிக அளவில் கூடி வரவேற்றனர். செண்டை மேளம், தப்பாட்டக் கலைஞர்கள் 4 இடங்களில் இசை முழங்கி, நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளித்தனர். சாலை நெடுகிலும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரையும் தனித்தனியாகவும், இணைந்து வரவேற்றும் அப்பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. வரவேற்பு பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

வழியில் ஓபிஎஸ்ஸை வரவேற்ற நிர்வாகிகள் சைதைபாபு, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் வெள்ளி வீரவாள் வழங்கியதுடன், மலர் கிரீடம், மாலை சூட்டினர். அதிமுக அலுவலக நுழைவுவாயிலில் பூரணகும்ப மரியாதை அளித்த மகளிர் அணியினர் வைத்திருந்த பதாகையில்,‘அம்மா தந்த மும்முறை முதல்வரே’ என்று எழுதப்பட்டிருந்தது. முதல்வர் பழனிசாமிக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டபோது, ‘எங்கள் சாமானிய முதல்வர் பழனிசாமி’ என்றவாசகம் பதாகையில் இடம்பெற்றிருந்தது. அவ்வை சண்முகம் சாலையில் நின்றிருந்த நிர்வாகிகளில் ஒரு பகுதியினர் ஓபிஎஸ்போன்ற முகக் கவசம் அணிந்திருந்தனர். இபிஎஸ் படத்துடன் கூடியசிறிய பதாகை, இருவர் முகமும்இடம்பெற்ற பதாகை ஆகியவற்றையும் பரவலாக காணமுடிந்தது.

278 பேர் பங்கேற்பு

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க 293 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 15 பேர் தவிர மற்றவர்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதில் பேசிய பெரும்பான்மையான நிர்வாகிகளும் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடு

கடந்த முறை உயர்நிலை கூட்டம் நடந்தபோது, நிர்வாகிகள் பேசியதை சிலர் தங்களது செல்போனில் ரகசியமாக பதிவு செய்து, பத்திரிகையாளர்களிடம் அளித்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனால், இம்முறை செல்போனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அனைவரிடமும் முன்கூட்டியே செல்போன் பெறப்பட்டு, கூட்டம் முடிந்த பிறகு திருப்பித் தரப்பட்டது. யாரும் நடுவே எழுந்து வெளியில் செல்லக் கூடாது. யாரிடமும் பேசக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பிற்பகல் 2 மணியை கடந்தும்கூட்டம் நீடித்ததால், உறுப்பினர்களுக்கு பக்கோடா, வடை, ஆவின் மோர், நறுமணப் பால் தரப்பட்டன.வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகு, அதிமுக அலுவலக வளாகத்துக்குள் செல்ல மட்டுமே செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x