ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை தொடங்கியது: சென்னையில் 2 பேரிடம் பரிசோதனை

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை தொடங்கியது: சென்னையில் 2 பேரிடம் பரிசோதனை

Published on

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கரோனா வைரஸ் தொற்றுக்கான கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை சென்னையில் தொடங்கியது.

கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பு மருந்து 2-ம் கட்ட ஆராய்ச்சியில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம்தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் முதல்கட்ட ஆராய்ச்சி நிறைவடைந்த நிலையில், 2-ம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முறை பல நாடுகளில் நடக்கிறது.

சென்னை அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் 17 மையங்களில் 1,600 பேருக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது. சென்னை மருத்துவமனைகளில் 300 பேரிடம் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு கண்காணிப்பாளராக பொது சுகாதாரம், நோய்தடுப்பு துறை இயக்குநர் செல்வவிநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவிஷீல்டு மருந்துபக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால், பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் பரிசோதனையை தொடங்க ஆக்ஸ்போர்டு நிறுவனம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, இந்தியாவிலும் பரிசோதனையை தொடங்க கடந்த வாரம் மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்தது. தமிழகத்தில் 300 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்த அனுமதி பெறப்பட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் முதல்கட்டமாக நேற்று 2 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை தொடங்கப்பட்டது. போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையிலும் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in