

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் 53 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்போரூரில் எம்எல்ஏ இதயவர்மன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக நகரச் செயலர் தேவராஜ், தெற்கு ஒன்றியச் செயலர் சேகர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், மதிமுக ஒன்றியச் செயலர்லோகு உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் மதிமுக மாநில துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.
ஸ்ரீபெரும்புதூரில் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டி.ஆர்.பாலு உரையாற்றினார். செங்கல்பட்டில் முன்னாள் நகர்மன்றதலைவர் அன்புச்செல்வன், திருக்கழுக்குன்றத்தில் நகரச் செயலர் யுவராஜ், பல்லாவரத்தில் எம்எல்ஏ கருணாநிதி, தாம்பரத்தில் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா, குன்றத்தூர் ஒன்றியத்தில் மனோகரன், பெருங்களத்தூரில் எஸ்.சேகர், மறைமலைநகரில் சண்முகம் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்நடைபெற்றன.
திருவள்ளூர் மாவட்ட பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் 31 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதில் திருவள்ளூர் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலர்கள் ஆவடி சா.மு.நாசர், கும்மிடிப்பூண்டி வேணு, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜேம்ஸ், ஏ.ஜி.சிதம்பரம், மதிமுக உயர்நிலை குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் சுதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் மாரியப்பன், திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், பூந்தமல்லி, திருவள்ளூர் எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.