

கரோனா ஊரடங்கு ஏறக்குறைய தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஜனவரி முதல் வீடுகள் விலை 6 சதவீதம் உயரும் வாய்ப்பு இருப்பதால், கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் தொழில் கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்போது படிப்படியாக மீண்டு வருகிறது. இந்நிலையில், கட்டுமானப் பணிக்கான முக்கிய மூலப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் தற்போது கட்டப்படும் வீடுகள், இனிமேல் புதிய திட்டத்தின்கீழ் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அதிகரிக்கும் என்று கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து இந்திய கட்டுமானத் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (கிரெடாய்) தமிழ்நாடு பிரிவு முன்னாள் தலைவர் நந்தகுமார் கூறியதாவது:
கரோனாவால் ரியல் எஸ்டேட் தொழிலே முடங்கிவிடும் என்று அச்சமடைந்தோம். கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளித்ததாலும், வெளிமாநிலத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு அனுமதி அளித்ததாலும் கட்டுமானத் தொழில் மீண்டு வருகிறது.
பொதுமக்கள் குறிப்பாக அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், செல்வந்தர்கள் ஆகியோர் ரூ.40 லட்சம்முதல் ரூ.60 லட்சம் வரையிலானவீடுகளை வாங்கத் தொடங்கிஉள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் விலையை விசாரிப்பது, இடத்தைப் பார்வையிடுவது, வங்கிக் கடன் பெற முயற்சி செய்வது பரவலாக அதிகரித்துள்ளது.
வங்கிக்கடன் பெற்று வீடு வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை வருவதால், அந்தக் காலங்களில் வீடுகள் விற்பனை 30 சதவீதம் வரை அதிகரிக்கும். கடந்த ஆண்டு இதேகாலகட்டத்துடன் ஒப்பிடும்போது60 சதவீதம் வீடுகள் விற்பனையாகிஉள்ளன. இது, அடுத்த சில மாதங்களில் படிப்படியாக 100 சதவீதத்தை எட்டும்.
இந்நிலையில், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கட்டுமான செலவினம் அதிகரித்துவிட்டது. உதாரணத்துக்கு ஒரு டன் இரும்புக் கம்பி விலை ரூ.38 ஆயிரத்தில் இருந்து ரூ.55 ஆயிரமாகியுள்ளது.
சிமென்ட் (50 கிலோ மூடை) விலை ரூ.280-ல் இருந்து ரூ.360ஆக உயர்ந்துள்ளது. பிளம்பர், எலெக்ட்ரீசியன், மேசன், கார்பென்டர், டைல்ஸ் பதிப்பவர் ஆகியோரின் தினக்கூலி ரூ.750-ல் இருந்து ரூ.900 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுக்கு உதவும் உதவியாளர்களின் தினசரி சம்பளம் ரூ.500-ல் இருந்து ரூ.700 ஆகிவிட்டது. இதனால், ஒரு சதுரஅடி கட்டுமான விலை ரூ.150-ல் இருந்து ரூ.200 ஆக அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் தற்போது வீடுவாங்காவிட்டால், அடுத்த ஆண்டு ஜனவரியில் வீட்டின் ஒரு சதுரஅடி விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.5,200 ஆக (5 சதவீதம் முதல்6 சதவீதம் வரை) அதிகரிக்கும். இதைத் தெரிந்து கொண்ட பொதுமக்கள், கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இவ்வாறு நந்தகுமார் கூறினார்.