

வீட்டுமனை இல்லாதவர்களுக்கு அரசின் உதவிகள் வழங்குவது நிறுத்தப்படவில்லை என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி எழுப்பிய அதிமுக உறுப்பினர் செல்வி ராமஜெயம் (புவனகிரி), ‘‘புவனகிரி தொகுதியில் நரிக்குறவர்கள் உள்ளிட்ட நலிந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வீட்டுமனை இல்லாததால் அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில்லை’’ என்றார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், ‘‘வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கும் அரசின் நலத்திட்ட உதவிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்த இடத்திலும் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு அரசின் உதவிகள் நிறுத்தப்படவில்லை. நரிக்குறவர்கள் உள்ளிட்ட நலிந்த மக்களுக்கு வீட்டுவசதியை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது’’ என்றார்.
அதிமுக உறுப்பினர் க.அழகுவேலு (கள்ளக்குறிச்சி) கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், ‘‘விழுப் புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் தியாகதுருகம் பேரூராட்சி பெரியமாம்பட்டு கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 26 நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.