

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வி யியல் கல்லூரிகளில் 1,144 உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ. 252.60 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:
கடந்த 4 ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 11 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 14 அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் 959 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பாடப்பிரிவுகளுக்காக அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரி யர்கள், 533 விரிவுரையாளர்கள் என மொத்தம் 1,144 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.
அண்ணா பல் கலைக்கழகத்தில் விடுதிகள், போக்குவரத்து வசதிகள், மைய நூல கங்கள், கணினி மையங்கள், சூரிய ஒளி யில் இருந்து ஆற்றல் உருவாக்கும் அமைப் புகள் ஆகிய உட்கட்ட மைப்பு வசதிகள் ரூ. 252 கோடியே 60 லட்சம் செலவில் மேற்கொள்ளப் படும்.
இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ‘ஆளில்லா வான்வெளி வாகனம்’ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ரூ.20 கோடியில் ஆளில்லா வான்வெளி வாகனம் வடிவமைக்கப் படும்.
அன்னை தெரசா (மகளிர்), அழகப்பா, பாரதிதாசன், பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார், பெரியார் ஆகிய பல்கலைக்கழகங்களில் ரூ.60 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அரசு கலை, அறிவியல் கல்லூ ரிகள், கல்வியியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி களில் ரூ.100 கோடியில் உட் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வரு கின்றன. இதற்காக மேலும் ரூ.62 கோடி ஒதுக்கப் படும். கல்வி, நிர்வாக கட்டிடங்கள், வகுப் பறைகள், விடுதிகள், ஆய் வகங்கள், கழிவறைகள் ஆகியவை இதன் மூலம் கட்டப்படும்.
பின்தங்கிய பகுதி களைச் சேர்ந்த மாண வர்கள் பயன்பெறும் வகையில் 5 புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் ரூ.150 கோடியில் தொடங்கப்படும். தமிழகத்தில் 1957-ம் ஆண்டுக்குப் பிறகு அரசு கல்வியியல் கல்லூரிகள் தொடங்கப்படவில்லை. எனவே, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகம் மூலம் ரூ.15 கோடியில் 5 உறுப்புக் கல்வியியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
10 லட்சம் புதிய மின் இணைப்புகள்
சட்டப்பேரவையில் நேற்று மின்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பேசியதாவது:
மின்வெட்டால் ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் தவிக்கின்றன. தமிழகத்தில்தான் தேவைக்கான மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து மின்சாரம் கிடைக்குமா என்று கர்நாடகம் கேட்டு வருகிறது. இந்த ஆண்டு தூத்துக்குடி அனல் மின்நிலைய அலகு 1 மற்றும் 5, மேட்டூர் அனல் மின்நிலையம் நிலை 1-ல் 2-வது அலகு ஆகியவற்றில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அமைப்புகள் ரூ.34.81 கோடியில் நிறுவப்படும்.
சென்னை குறளகம், மருத்துவ சேவை இயக்குநரக வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் சூரிய சக்தி அமைப்பு நிறுவப்படும். விழுப்புரம் மாவட்டம் இரும்பை கிராமத்துக்கு தேவையான மின்சாரத்தை அதே கிராமத்தில் சூரிய சக்தி கலன் மூலம் தயாரிக்க முன்னோடி திட்டம் ரூ.2.06 கோடியில் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தில் இந்த ஆண்டு நேரடி நியமனம் மூலம் 900 தொழில்நுட்ப பதவி காலியிடங்கள் உட்பட 1,950 காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும். 2015-16ம் ஆண்டில் 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும்.